வாரணாசி:உத்தர பிரதேசம், வாரணாசியில் கங்கை நதிக்கு நடக்கும் ஆரத்தியை தரிசிக்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, சிலர் கறுப்பு கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக நடக்கிறது. நேற்று ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில், மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் உத்தர பிரதேசத்துக்கு வந்தார்.
வாரணாசியில் கங்கை நதிக்கு நடக்கும் ஆரத்தியை தரிசிக்க, தன் கட்சியினருடன் வந்த மம்தாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பி கறுப்பு கொடி காட்டினர். இதனால், பெரும்பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மம்தாவை நாற்காலியில் அமரும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர் கங்கை கரையின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து ஆரத்தியை தரிசித்தார்.
பின், மம்தா கூறியதாவது:விமான நிலையத்திலிருந்து, கங்கையின் தசாஸ்வமேத படித்துறைக்கு காரில் சென்றேன். வழியில், பா.ஜ.,வினர் சிலர் காரை மறித்தனர். காரை தடிகளால் தாக்கிய அவர்கள், என்னை திரும்பிப் போகும்படி கத்தினர்.நான் கோழையில்லை; என் போராட்ட குணம் அனைவருக்கும் தெரியும். மேற்கு வங்கத்தில, மார்க்சிஸ்ட் கட்சியினரால் பல முறை கடுமையாக தாக்கப்பட்டுள்ளேன். ஆனால், நான் ஒரு போதும் பயந்தது இல்லை. உத்தர பிரதேசத்தில் தோல்வியடைவது உறுதியாகிவிட்டதால் தான், பா.ஜ.,வினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதை புரிந்து கொண்டேன். கங்கை கரைக்கு தைரியமாக சென்று, ஆரத்தியை தரிசித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.