மதுரை: மேலுார் அருகே கடத்தப்பட்ட சிறுமி, எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய சிறுமியின் காதலன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், மேலுார், தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பிப்., 14ல் மாயமானார். அப்பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா, 26 என்பவருடன் பழகி, அவருடன் சென்றது தெரிந்தது. மார்ச் 3ல் மயக்க நிலையில், சிறுமியை அவரது வீட்டில் நாகூர் ஹனிபாவின் தாய் மதீனா பேகம், 40, விட்டு சென்றார். உடல்நலம் பாதித்த சிறுமியை, பெற்றோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை கடத்திய நாகூர் ஹனிபாவை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், சிறுமியும், அவரும் காதலித்ததாகவும், பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றதாகவும், அடுத்த நாள், அங்கிருந்து ஈரோடு பள்ளிப்பாளையத்தில் உள்ள தன் சித்தப்பா வீட்டிற்கு, நாகூர் ஹனிபா அழைத்து சென்று தங்கியதாகவும் சிறுமி தெரிவித்தார். போலீசார் தேடுவதை அறிந்து, தற்கொலை முடிவில் அவரும், சிறுமியும் எலி பேஸ்ட் சாப்பிட்டனர். ஆனால், நாகூர் ஹனிபா உடனே வெளியே துப்பியுள்ளார். சிறுமி மட்டும் முழுமையாக சாப்பிட்டதால், உடல்நிலை பாதித்த நிலையில் வீட்டில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று சிறுமி இறந்தார். இதையடுத்து, கடத்தலில் நாகூர் ஹனிபாவிற்கு உதவிய நண்பர்கள் பெருமாள் கிருஷ்ணன், திருநகர் பிரகாஷ், 24; திருப்பூர் ராஜா முகமது, 26; தாய் மதீனா, உறவினர்கள் சாகுல் ஹமீது, 25; ரம்ஜான் பேகம், 39; ராஜா முகமது, 40, ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில், போலீசாரின் தாமத நடவடிக்கையை கண்டித்து, மேலுார் நான்கு வழிச்சாலை அருகே சர்வீஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் வழக்கு கொலையாக மாற்றம்
மதுரை எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், “ஈரோடு பள்ளிப்பாளையத்தில் ஹனிபா வீட்டில் அவர்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். கடத்தல் தொடர்பாக 'போக்சோ' சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிறுமி இறந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை. போதை மருந்தும் உட்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது,” என்றார்.