புதுடில்லி: உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்களை மத்திய அரசு ‛ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் மீட்டுக் கொண்டுவரும் நிலையில், தாயகம் திரும்பிய மாணவர்களை மத்திய அமைச்சர்கள் வரவேற்று ‛நமஸ்காரம்' செலுத்தினாலும், பதிலுக்கு மரியாதை அளிக்காமல் கடந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்பு விமானங்கள் மூலம் கொண்டுவர மத்திய அரசு ‛ஆபரேஷன் கங்கா' என்னும் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் அடிப்படையில் மீட்பு விமானங்கள் பல உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்திய மாணவர்களை விமானங்களில் படிப்படியாக மீட்டு வந்தது.
கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை உக்ரைனில் சிக்கியிருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் 15,900 பேரை 76 விமானங்களில் அழைத்து வந்துள்ளது மத்திய அரசு. குறுகிய காலத்தில் பெரும்பாலான மாணவர்களை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ள மத்திய அரசின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அப்படியிருக்கும் சூழலில், போர்க்களத்தில் சிக்கி தவித்து, தப்பித்து தாயகத்திற்கு திரும்ப பெரிதும் உதவிய மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் மாணவர்கள் மரியாதை கூட செலுத்தாத நிகழ்வுகளும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

உக்ரைனில் இருந்து ‛ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் இந்தியா திரும்பிய மாணவர்களை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாணவர்களுக்கு ‛நமஸ்காரம்' தெரிவித்து வரவேற்றார். ஆனால், மாணவர்கள் பதிலுக்கு மரியாதை கூட செலுத்தாமல் கடந்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE