புதுடில்லி : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வழங்கப்படும் மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள பெண்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகளிர் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தொழில், விவசாயம், புதுமை, சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை ஊக்குவிக்கும் வகையில் 'நாரி சக்தி புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது.

இதன்படி, 2020 மற்றும் 21ம் ஆண்டுகளில் தலா 14 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு, இன்று டில்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.
விருது பெறும் கடற்படை கேப்டன் ராதிகா மேனன், தொழில் முனைவோர் அனிதா குப்தா, இயற்கை விவசாயி மற்றும் பழங்குடியின ஆர்வலர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, இன்டெல்- இந்தியா நிறுவன தலைவர் நிவ்ருதி ராய். மாற்றுத்திறனானி கதக் நடன கலைஞர் சைலி நந்த்கிஷோர் உள்ளிட்டோர் நேற்று டில்லி வந்தனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE