சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க. எதிர்ப்பு!..| Dinamalar

சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க. எதிர்ப்பு!..

Updated : மார் 09, 2022 | Added : மார் 08, 2022 | கருத்துகள் (33) | |
அ.தி.மு.க.,வில், சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, கட்சியின் 60 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.அ.தி.மு.க.,வில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என, தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு குரல் கொடுத்தனர்.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால், அவரது ஆசியுடன் தான் இந்த குரல் கிளம்பியதாக
சசிகலா,அ.தி.மு.க., எதிர்ப்பு!..

அ.தி.மு.க.,வில், சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, கட்சியின் 60 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என, தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு குரல் கொடுத்தனர்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால், அவரது ஆசியுடன் தான் இந்த குரல் கிளம்பியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, கட்சி கட்டுப்பாட்டை மீறி, சசிகலாவை சந்தித்தார்.இதன் காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும், சசிகலாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற விவாதம், அ.தி.மு.க.,வில் ஓயவில்லை.

அதே நேரத்தில் சசிகலாவை மீண்டும் சேர்க்க, பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களுக்கு விருப்பம் இல்லை. பா.ஜ., மேலிடமும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

சசிகலாவை சேர்க்கும் விவகாரம் தொடர்பாக, முக்குலத்தோர் சமுதாய எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம், பழனிசாமி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது.

அப்போது, பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரை தவிர, 60 எம்.எல்.ஏ.,க்கள் வரை, பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தும், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசி உள்ளனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில் சசிகலா படம் போட்டு, நாங்கள் ஓட்டு கேட்கவில்லை. முதல்வர் பழனிசாமி படத்தை போட்டும், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை சொல்லியும் தான்வெற்றி பெற்றோம். நாங்கள் அனைவரும் பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளோம். அதனால் தான், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, அவரை தேர்வு செய்து, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


அ.ம.மு.க.,வில் இணைவாரா?தென் மாவட்டங்களில், சசிகலா மேற்கொண்ட சுற்றுப்பயணம் தோல்வி அடைந்துள்ளதால், அடுத்தபடியாக அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் தன் பலத்தை நிரூபிக்கும் நோக்கில், இப்பயணத்தை மேற்கொள்கிறார்.அ.தி.மு.க.,வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர் அ.ம.மு.க.,வில் தான் இணைந்து செயல்படுவார் என, தினகரன் எதிர்பார்க்கிறார். காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், கட்சியை பலப்படுத்த வேண்டும் என, மண்டல பொறுப்பாளர்களுக்கும், தினகரன் உத்தரவிட்டு உள்ளார்.


ஆதரவாளர்கள் தவிப்புஉலக மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை அடையார், எம்.ஜி.ஆர்., ஜானகி கலை அறிவியல் கல்லுாரி மாணவியருடன், சசிகலா கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்த, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கல்லுாரி கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முன்வராமல், சசிகலா ஆதரவாளர்கள் ஒதுங்கி விட்டனர். தற்போது அவர்கள், அ.தி.மு.க.,விலும் சேர முடியாமல், அ.ம.மு.க., விலும் இணைய முடியாமல் தவிக்கின்றனர்.


சசிகலா அழைப்பால் பீதிபோன் எண்ணை மாற்றும் கட்சியினர்!கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள சசிகலா, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களை தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளதால், அவர்கள் தங்கள் மொபைல் எண்களை மாற்றி வருகின்றனர்.
நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஆன்மிக தலங்களில் தரிசனம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பை முடித்துள்ள சசிகலா, அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில், குறிப்பாக சேலத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டார்.இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் முதல்வர் பழனிசாமி தொகுதியைச் சேர்ந்த சுரேஷ் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொள்கின்றனர்.

இவர்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.பி., ஒன்றிய, நகர, பேரூர் செயலர்களின் மொபைல் எண்கள், உதவியாளர்களின் எண்களை பட்டியலிட்டு, சசிகலாவிடம் வழங்கினர்.மூன்று நாளாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் போர்வையில், அவர்களின் மனநிலையை மாற்றும் செயல்களில், சசிகலா, அவர்களது உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொங்கு மண்டல சுற்றுப்பயணத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.இத்தகவல் பரவ தொடங்கியதால், சசிகலாவிடம் பேசுவதை தவிர்க்க, நிர்வாகிகள், மொபைல் எண்களை மாற்றம் செய்து வருகின்றனர். புது எண்களை, நெருக்கமானவர்களிடம் மட்டும் வழங்கி வருகின்றனர். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X