புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்தாண்டு மே 28ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அப்போதிருந்து தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை, அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது. இதில், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதுரை: ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேரறிவாளன் தனக்கான வாய்ப்பை ஏற்கனவே பயன்படுத்தி விட்டார். இரண்டாவது வாய்ப்பு கிடையாது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது கவர்னர் முடிவெடுக்க முடியாது. அது ஜனாதிபதியின் அதிகாரம். ஜனாதிபதி மட்டும் தான் முடிவு எடுக்க முடியும். சம்மந்தப்பட்ட அரசு தான் ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு நீதிபதி, ‛219 பாரா சொல்வதுபடி அது மாநில அரசான தமிழக அரசு தான்' எனக் கூறினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‛இல்லை, அது மத்திய அரசு' எனக் குறிப்பிட்டார்.

பின்னர் நீதிபதி கூறுகையில், ‛நீங்கள் (மத்திய அரசு) இதில் மிகவும் தாமதம் செய்கிறீர்களே. சம்மந்தப்பட்ட நபரான பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். இன்னும் தாமதம் செய்வதை எப்படி ஏற்பது? அவரின் விடுதலைக்கு யாருக்கு அதிகாரம் என்பதை பின்னர் விசாரிக்கலாம். தற்போது ஜாமின் தருவது பற்றியே வழக்கு விசாரணை நடக்கிறது. பரோலில் இருக்கும் பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை' எனக் கூறியதுடன், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்டார்.