புதுடில்லி: ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து, சுமி நகரில் இருந்து 650 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் 14வது நாளை எட்டி உள்ளது. அங்கு சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது. 83 விமானங்கள் வாயிலாக 17,100 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், அந்த நகரத்தில் இருந்த, 650க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கலுக்கு உள்ளாகினர். தங்களிடம் இருக்கும் உணவு, குடிநீர் காலியாக போவதாகவும், சொந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவசர செய்திகளை தூதரகத்திற்கு அனுப்பினர். ரஷ்யாவின் கடுமையான தாக்குதல் காரணமாக, அவர்களை பத்திரமாக மீட்பதில் இந்திய அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலை மிகவும் சிக்கலானதாகவும், ஆபத்தானதாகவும் மாறியதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய மாணவர்களை மீட்க கடந்த திங்களன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்ததால், பிரச்னை பெரிதானது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இரு நாட்டு தலைவர்களும், பச்சை கொடி காட்டியதுடன், அவர்கள் பத்திரமாக வெளியேறுவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உக்ரைன் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தார். ஜெனிவா மற்றும் உக்ரைனில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினருடனும், மாணவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் மாணவர்கள் மற்றும் மக்கள் வெளியேறுவதற்கு வழி ஏற்படுத்தி தரும்படி மாஸ்கோ மற்றும் கீவ் நகரில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் பின்னர், சுமி நகரில் இருந்து பஸ் மூலம் உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள போல்டோவா பகுதிக்கு இந்திய மாணவர்கள் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். இதனை மத்திய வெளியறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அங்கிருந்து இந்திய மாணவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.