லக்னோ: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களிலும் காங்., பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உ.பி.,யில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. பஞ்சாபில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருவாரியான இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று புதிய ஆட்சியை அமைக்கும் வரலாறு படைக்கிறது. உத்தர்கண்ட், மணிப்பபூரிலும் பா.ஜ.,வே முன்னிலை வகிக்கிறது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது.
கருத்துக் கணிப்புகள்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், இது, மினி லோக்சபா தேர்தலாக கருதப்படுகிறது.ஐந்து மாநிலங்களிலும் வெளியான ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்கும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.சில கருத்துக் கணிப்புகள், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில் இழுபறி ஏற்படும் என தெரிவித்துள்ளன.
ஓட்டு எண்ணிக்கை
இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, இன்று காலை துவங்குகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதையொட்டி ஐந்து மாநிலங்களிலும், குறிப்பாக ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொகுதி முன்னணி நிலவரங்களை உடனுக்கு உடன் அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் காலை 9.௦௦ மணி முதல், முன்னணி நிலவரங்கள் வெளியாகும். இன்று மாலைக்குள், ஐந்து மாநிலங்களிலும் யார் ஆட்சியை பிடிப்பர் என்பது தெரிந்துவிடும்.
63 தமிழக ஐ.ஏ.எஸ்.,கள் பயணம்
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், தமிழகத்தைச் சேர்ந்த 63 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக, தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஓட்டுப்பதிவு
முடிந்ததும் சென்னை திரும்பினர். இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதையடுத்து, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீண்டும் அங்கு சென்றுள்ளனர்.
'ஓட்டு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், 12ம் தேதி தான், தேர்தல் பணியில் இருந்து, 63 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் விடுவிக்கப்படுவர்' என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஞ்சாபில் 'ஸ்வீட்'களுக்கு கிராக்கி
பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாநிலத்தில் 'ஸ்வீட்'கள் மற்றும் பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இனிப்பு கடைகளில், பல்வேறு கட்சிகள் சார்பில், 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பூ வியாபாரிகளிடமும், பல கட்சிகள் ஆர்டர் கொடுத்துள்ளன.
கோவாவில் 5 ஆண்டுகளில் 20 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம்
கோவா சட்டசபைக்கு, நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ௧௭ல் காங்கிரசும், 13ல் பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. எனினும், சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது. மனோகர் பரிக்கர் முதல்வராக பதவியேற்றார். இதன்பின், காங்கிரசிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் விலகும் படலம் துவங்கியது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், போட்டியிட வாய்ப்பு வழங்காததால், பா.ஜ.,விலிருந்து சில எம்.எல்.ஏ.,க்கள் விலகினர்.மொத்தத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவாவில் ௨௦ எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். தற்போது நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின் வெளியான சில கருத்து கணிப்புகளில், கோவாவில் இழுபறி நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை இப்போதே பாதுகாக்க துவங்கியுள்ளன.இதேபோல், உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் இழுபறி ஏற்படலாம் என சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, இந்த மாநிலங்களில் தங்கள் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், இந்த மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர்.