புதுடில்லி: பஞ்சாப், உத்தர்கண்ட், கோவா மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற காங்கிரசின் எதிர்பார்ப்பு பொய்யாகி போனது. அந்த மாநிலங்களில் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்தது. மற்ற மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தேர்தலுக்கு பின்னர், பஞ்சாபில் ஆட்சியை தக்க வைப்போம் என தெரிவித்த காங்கிரஸ், உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்தது.
கோவாவில் கடந்த முறை போல் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிவிடாமல் இருப்பதற்காக அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது. தேர்தல் முடிந்த பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலிட நிர்வாகிகள் விரைந்தனர்.
ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கிய நிலையில் அக்கட்சியின் கனவுகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகியது. பஞ்சாபில் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கிறது.17 இடங்களில் மட்டுமே அக்கட்சி தற்போதைய நிலையில் முன்னிலை உள்ளது. அதேபோல், கோவாவிலும் அக்கட்சி 10 இடங்களிலும், உத்தரகண்டில் 20 இடங்களிலும் முன்னிலை பெற்று அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.

ஆனால், உ.பி.,யில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சி 01 இடத்திலும், மணிப்பூரில் 9 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.