புதுடில்லி :ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாபை, ஆம் ஆத்மி கட்சி வாரி சுருட்டியுள்ளது. உத்தர பிரதேசத்தில் 1985க்குப் பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகும் வரலாற்று சாதனையை, பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் படைத்துள்ளார். இந்த தேர்தலில், காங்.,கின் செல்வாக்கு மேலும் சரிந்துள்ள நிலையில், அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் காணாமல் போயின.
கொரோனா வைரஸ் பரவல், பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலை, மத்திய அரசின் விவசாயிகள் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் என பல பிரச்னைகளுக்கு இடையே, உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பா.ஜ., அரசுகளும், பஞ்சாபில் காங்., அரசும் அமைந்துள்ளன. கடந்த மாதம் 10ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி வரை சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது.
துவக்கத்தில் இருந்தே, ஆளும் நான்கு மாநிலங்களிலும் பா.ஜ., முன்னிலை பெற்றது. இந்த நான்கு மாநிலங்களிலும், எவ்வித அரசியல் பேரத்துக்கோ, குதிரை பேரத்துக்கோ வாய்ப்பு இல்லாமல், பா.ஜ., அமோக வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியின் வாயிலாக, உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் அமர உள்ளார். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், 1985க்குப் பின், ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ள வரலாற்று சாதனையை யோகி ஆதித்யநாத் படைத்துஉள்ளார்.
சிறப்பான முன்னேற்றம்

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 202 தேவை என்ற நிலையில், 273 இடங்களில் பா.ஜ., கூட்டணி வென்று உள்ளது. கடந்த தேர்தலில், 312 இடங்களில் வென்று அசத்திய பா.ஜ., தற்போதைய தேர்தலில் அதைவிட குறைந்த இடங்களைப் பெற்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.கடந்த தேர்தலில் 47 இடங்களில் வென்ற முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அந்த கட்சி, 112 தொகுதிகளில் வென்றுள்ளது.அதே நேரத்தில், கடந்த தேர்தலில் ஏழு தொகுதிகளில் வென்றதே மிகவும் மோசமான செயல்பாடாக இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
புதிய எழுச்சி
பஞ்சாபில் ஆளுங்கட்சியாக இருந்த காங்.,குக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இங்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. துடைப்பம் சின்னத்தை பெற்றுள்ள அந்த கட்சி, பஞ்சாபை வாரி சுருட்டியுள்ளது. இதன் மூலம், தேசிய அளவில் இரண்டு மாநிலங்களில் ஆட்சி புரியும் மாநில கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, தேசிய அரசியலில் முக்கிய பங்கை வகிப்பதற்கான அஸ்திவாரத்தை பலப்படுத்தி உள்ளது. பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி 92ல் வென்று உள்ளது. கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த காங்., தற்போது 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. அகாலி தளம் மூன்று இடங்களிலும், பா.ஜ., இரண்டு இடங்களிலும் வென்றுள்ளன.
குவியும் வெற்றி
தொங்கு சட்டசபை அமையலாம், இழுபறி ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது.
கோவாவில் 40 தொகுதிகளில் 20ல் வென்று, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் ஒரு இடம் தேவை என்ற நிலையில், மூன்று சுயேச்சைகளின் ஆதரவு கிடைத்துள்ளதாக பா.ஜ., கூறுகிறது. இதைத் தவிர, முன்பு கூட்டணியில் இருந்த மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, மூன்று இடங்களில் வென்றது. அந்த கட்சியும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகண்டில் எவ்வித குழப்பமும் இல்லாமல், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பா.ஜ., 47ல் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இங்கு, காங்., 19ல் வென்றுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஓட்டு எண்ணிக்கை மிகவும் தாமதமாக நடந்தது. இங்குள்ள 60 தொகுதிகளில், பா.ஜ., 32ல் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸ் ஐந்து மாநிலங்களிலும் கடும் சரிவை சந்தித்துள்ளது. பஞ்சாபை இழந்ததன் மூலம், தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே அக்கட்சியின் ஆட்சி உள்ளது.
இந்த தேர்தல், பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் எழுச்சியை தந்துள்ள நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த அகாலி தளம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் காணாமல் போயின.
வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. நான்கு மாநிலங்களில் அதிக இடங்களில் பா.ஜ., வென்றுள்ளதால், அடுத்து நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
தேர்தல் தோல்வி எதிரொலி காங்., அலுவலகம் 'வெறிச்'
நேற்று ஐந்து மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது, துவக்கத்தில் இருந்தே காங்., தோல்வி முகத்தில் இருந்ததால், அதன் டில்லி தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று காலை, உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.
அப்போது, டில்லி காங்., தலைமை அலுவலகத்திற்கு வெளியே, 'பிரியங்கா - ராகுல் சேனா' தலைவர் ஜகதீஷ் சர்மா, தன் ஆதரவாளர்களுடன் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி கோஷம் எழுப்பினார்.'மின்னணு ஓட்டு இயந்திரம் உள்ளவரை, மகாவிஷ்ணுவே வந்தாலும், மோடியை தோற்கடிக்க முடியாது' என அவர் புலம்பினார்.
பின், ஓட்டு எண்ணிக்கையில், ஐந்து மாநிலங்களிலும் காங்., பின்தங்கியுள்ள தகவல் வெளியானதும், காங்., அலுவலகத்தில் இருந்து பலர் வெளியேறினர். விரல் விட்டு எண்ணக்கூடிய செய்தியாளர்கள் மட்டும் இருந்தனர். அவர்களுக்கு, தேர்தலில் காங்.,குக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை கூற முடியாமல், அங்கிருந்த சில தலைவர்கள் திணறினர்.
காங்., தலைவர் ஒருவர் கூறியதாவது:பஞ்சாப் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. அதை, ஆம் ஆத்மி சாமர்த்தியமாக தன் பிரசாரத்தில் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகண்டில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். அங்கு, தொகுதி நிலவரத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம். கோவா முடிவு உண்மையிலேயே எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.