சென்னை : ''சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் துவங்கியது. தலைமை வகித்து, முதல்வர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்தில், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதுாக்க, அனுமதித்து விடக்கூடாது. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற மக்களை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை ஒடுக்குவதில் எந்தவித பாரபட்சமும் காட்டக் கூடாது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய, சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாவட்ட அளவில் முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால், பொது மக்கள் தலைமைச் செயலகத்திற்கு மனுக்களை அனுப்புகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும், மாவட்டத்தின் தலைமை வழிகாட்டியாக, நீங்கள் திகழ வேண்டும்.
'தமிழகம் நம்பர் 1' என்ற நிலையை அடையும், என் கனவு திட்டத்தை, உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்.மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். எனவே, அனைவரும் நேர்மையாக, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேணடும். அப்படி செயல்படுவோருக்கு, அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாதாந்திர கூட்டம்!
சென்னையில் நேற்று காலை நடந்த மாநாட்டில், அமைச்சர்கள், துறை செயலர்கள், கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.முதல்வர் கூறிய அறிவுரை:
* மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான, மாதாந்திர கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும். அதில் எடுத்த முடிவுகள், முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, அடுத்து வரும் கூட்டங்களில் ஆராய்ந்து, முழுமையாக அதற்கு தீர்வு காண வேண்டும்
* ஆட்சியின் மதிப்பீடு என்பது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தான் உள்ளது. அதை அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE