சண்டிகர்: பஞ்சாபில் சொல்லி அடித்து ஆட்சியை பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. டில்லி மாடலில் ஊழல் இல்லாத நிர்வாகம், சுகாதாரத்திற்கு முன்னுரிமை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை போன்ற வாக்குறுதிகள் பஞ்சாப் மக்களை கவர்ந்தன. 70 ஆண்டு காலமாக காங்கிரஸ், அகாலிதளத்திற்கு மாறி மாறி ஓட்டு அளித்தவர்கள், இம்முறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, ஊழலை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தியவர். டில்லியில் வருமான வரித்துறை இணை கமிஷனராக பணியாற்றிய இவர், அரசியலில் குதித்து புரட்சி ஏற்படுத்தினார். 2013ல் டில்லி முதல்வரானார். தொடர்ந்து முதல்வராகவே நீடிக்கிறார். தனது ஆதிக்கத்தை பஞ்சாபிலும் நீடிக்கச் செய்ய, கடந்த இரு ஆண்டுகளாக திட்டமிட்டு காய் நகர்த்தினார்.
* பஞ்சாப் மக்கள் சுகாதாரம், கல்விக்காக அதிகம் செலவிடுகின்றனர். இதை உணர்ந்து தாங்கள் ஆட்சி அமைத்தால் கல்வி, சுகாதாரம், 24 மணி நேர மின்சாரம், சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஊழலை ஒழித்து வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற பிரசாரம் இளைஞர்களை கவர்ந்தது.

* பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உதவி தொகை வழங்கப்படும் என்றார் கெஜ்ரி. இதற்கான நிதி ஆதாரம் எங்கே என சில கட்சிகள் கேள்வி எழுப்பின. 'மணல் கொள்ளையை தடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி கிடைக்கும். இதில், 10,000 கோடியை பெண்கள் உதவித் தொகைக்கு செலவிட்டு, மீதி தொகையை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்யப்படும்' என சாமர்த்தியமாக விளக்கம் அளித்தார் கெஜ்ரி.
* கல்வியில் புரட்சி ஏற்படுத்துவதாக உறுதி அளித்தார். ஆசிரியர் இடம் மாறுதலில் வெளிப்படைத்தன்மை, காலி இடங்களை உடனே நிரப்புதல், வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, ஆசிரியர் குடும்பத்திற்கு இலவச மருத்துவ வசதி என அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்தார்.
* டில்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராடிய போது நேரில் சென்று பல முறை ஆதரவு அளித்தார் கெஜ்ரி. இது விவசாயிகளின் ஓட்டுகளை அறுவடை செய்ய கைகொடுத்தது. 'வர்த்தகர்களுக்கு பக்கபலமாக இருப்போம். 'ரெய்டு' போன்ற தொல்லை தர மாட்டோம். வர்த்தகர்களிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., நிதி கேட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அறிவிப்பு வியாபாரிகளிடம் வரவேற்பை பெற்றது. முதல்வர் பதவிக்கு மக்களிடம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பகவந்த் சிங் மானை தேர்வு செய்தது கூடுதல் பிளஸ்.
* 'அமைதியான பஞ்சாப்', போதை பொருள் கும்பல் ஒழிப்பு, புதிதாக 16,000 மருத்துவ கிளினிக், வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம், மின்சார தொகை பாக்கி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்தார். 'இந்த முறை முட்டாளாக மாட்டோம். பகவந்த் சிங் மான், கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு அளிப்போம்,'என்ற முழக்கத்தை ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து எழுப்பினர். இதற்கு ஏற்ப பஞ்சாப் மக்கள் புத்திசாலிகளாக மாறி, மகத்தான மாற்றத்திற்கு வித்திட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE