பீஜிங்-சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கிய நம் அண்டை நாடான சீனாவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதர நாடுகளில் அதன் பரவல் வேகமெடுத்தபோதும், இங்கு குறைவான மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
நேற்று முன்தினம் மட்டும், 1,938 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், 1,807 பேர் உள்நாட்டிலேயே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 131 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், சீன தேசிய சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. இதில், 1,412 பேர், ஜிலின் மாகாணத்தை சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது. இந்த மாகாண தலைநகர் சாங்சனில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 90 லட்சம் மக்கள் வசிக்கும் இங்கு, ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜிலின் மாகாணத்தை தவிர, ஷாண்டோங் மாகாணத்தில் 175 பேரும், குவாங்டாங்கில் 62 பேரும், ஷான்சியில் 39 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் பீஜிங்கில், 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஹாங்காங்கில், ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE