புதுச்சேரி : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாழைக்குளத்தில் நடந்தது.தொகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பங்கேற்று, ஏழை எளிய மக்களுக்கு சேலை, வேட்டி, சர்க்கரை வழங்கி பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் 5 இடத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, உரிமை பெற்று தரும் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று இலவச அரிசி, சர்க்கரை, பொங்கல் பொருள் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
எதிர்கட்சி அந்தஸ்தை தி.மு.க., சரியாக பயன்படுத்தாமல், உளறி வருகிறது. புதுச்சேரியில் திட்ட குழு இல்லாத நிலையில், பட்ஜெட்டுக்கு முன்னதாக திட்ட குழு கூட்ட வேண்டும் என தி.மு.க. கோரிக்கை வைப்பது நகைப்பாக உள்ளது.
கடந்த காங்., தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட முழு பட்ஜெட் தாக்கல் செய்யமுடியாதவர்கள், இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்பது வியப்பாக உள்ளது. தி.மு.க., மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படாமல் இருந்து, மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளது என பேசினார்.