பீஜிங் : சீனாவில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், 10 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில், கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நேற்று முன்தினம், 3,400 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 10 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷென்சென் நகரில், 'ஆப்பிள்' போன் தயாரிக்கும் தொழிற்சாலையை, பாக்ஸ்கான் நிறுவனம் மூடியுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பெரிய நகரமான ஷாங்காயில், சில குடியிருப்புகள் மற்றும் அலுவலகப் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜிலின் மாகாணத்தில், நேற்று இரண்டாவது நாளாக, 1,000 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இங்கு, தொழிற்சாலைகள் அதிகமுள்ள சங்சுன் உள்ளிட்ட ஐந்து நகரங்களில், இம்மாதம் துவக்கம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 'கொரோனா பாதிப்பு அறவே இல்லை' என, சீனா அறிவித்ததற்கு மாறான சூழல் தற்போது உருவாகியுள்ளது.
இதற்கிடையே, மூன்று மாகாணங்களில் கொரோனா பரவலை தடுக்கத் தவறியதாக, சுகாதார துறை அதிகாரிகள், 26 பேரை சீன அரசு பணி நீக்கம் செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE