பெங்களூரு: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில்;
‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்' என உத்தரவிட்டது.
மேலும், ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.