சென்னை: தமிழக கவர்னர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 15) சந்தித்தார். அதேவேளையில் லோக்சபாவில் தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என திமுக எம்.பி., பாலு வலியுறுத்தினார்.
தமிழக சட்டசபையில், நிறைவேற்றப்பட்ட 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு, கவர்னர் இன்னும் அனுப்பி வைக்கவில்லை. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 15) பிற்பகலில் கவர்னர் ரவியை சந்தித்துள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கவர்னர் மாளிகை சென்றனர். இந்த சந்திப்பில், நீட் சட்ட திருத்த மசோதாவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா

இதனிடையே லோக்சபாவில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். லோக்சபாவில் அவர் பேசுகையில், ‛தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிலுவையில் வைத்துள்ளார். சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். கவர்னர் ரவி சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார். சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கவர்னர் ரவியை மாற்ற வேண்டும்' என பேசினார்.