கோவை: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், மக்கள் கூடும் பொது இடங்களில், உதவி மைய எண்கள் கொண்ட, விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடக்கின்றன.

குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் பட்சத்தில், புகார் அளிப்பது அவசியம். இதற்காக, பிரத்யேகமாக சைல்டு லைன் சேவை உள்ளது. இது தவிர, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கவுன்சிலிங் பெற 14417 என்ற எண்ணும், பெண்களுக்கு பிரத்யேக உதவி மைய சேவை 181 செயல்பாட்டில் உள்ளது. இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு, தகவல் அளித்தால் மட்டுமே போதுமானது.
புகார் அளிப்பவரின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். புகார் பதிவானதும், சம்பவ இடத்திற்கு உரிய துறை அதிகாரிகள் சென்று, அடுத்த கட்ட விசாரணையை துவங்குவர். இதுசார்ந்து, பள்ளி பாடப்புத்தகத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்களும் இச்சேவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், 'நிமிர்ந்து நில், துணிந்து சொல்' என்ற வாசகம் அடங்கிய, உதவி மைய எண்கள் கொண்ட ஸ்டிக்கர், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லுார் மற்றும் நகரின் முக்கிய பேருந்து நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், சைல்டு லைன் மூலம், மற்ற பொது இடங்களிலும், இந்த ஸ்டிக்கர் ஒட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, அடிக்கடி மக்கள் பார்வையில் படும்பட்சத்தில், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், புகார் அளிக்க வேண்டுமென்ற, உந்துதல் ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE