கோவை : உள்ளாட்சி தேர்தலில், கோவையில் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்த கட்டமாக, உட்கட்சி தேர்தல் நடத்தி, கட்டமைப்பை மாற்றியமைக்க, தி.மு.க., திட்டமிட்டிருக்கிறது.
தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடத்தி, ஐந்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. தேர்தல் ஆணைய விதிப்படி, கடந்தாண்டு, டிச., 31க்குள் கட்சி தேர்தல் நடத்தி, அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தாததால், கட்சி தரப்பில் அவகாசம் பெறப்பட்டிருக்கிறது. அதே நேரம், ஜூன் மாதத்துக்குள் உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இமாலய வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த கட்டமாக, கட்சி தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, தலைமை முடிவு செய்திருக்கிறது. ஆளுங்கட்சி என்பதால், பதவியை கைப்பற்ற போட்டி கடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறது.

அதே நேரம், கட்சிக்காக உண்மையாக உழைக்கக் கூடியவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருடன் கூட்டணி அமைக்காமல் செயல்படுபவர்கள் அடுத்த கட்டமாக லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டிய பொறுப்பு இருப்பதால், திறனுடைய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஆனால், கோவையில் தற்போது செயல்படும் நிர்வாகிகள் பலரது மீதும் அதிருப்தி நிலவுகிறது. சட்ட சபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளையும் தி.மு.க., இழக்க நேரிட்டதற்கு, கட்சியினர் உள்ளடி வேலை செய்ததே காரணம் என, உளவுத்துறை ஏற்கனவே அறிக்கை அளித்திருக்கிறது.
இப்போது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியாக சிலர் களமிறங்கினர். சில நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தனர். உள்ளடி வேலை பார்த்தவர்கள், 'சீட்' கொடுக்காததால் ஒதுங்கி நின்றவர்கள், சொன்ன வேலையை கனகச்சிதமாக செய்து முடித்தவர்கள், வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என, பலரையும் பட்டியலிட்டு, 'லிஸ்ட்' எடுத்து வைத்திருக்கின்றனர்.
இதில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்களுக்கு, பொறுப்பு வழங்காமல் ஓரங்கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது.
உள்ளடி வேலைக்கு இதுதான் தண்டனை!
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:வார்டு கமிட்டியில், ஒரு தலைவர், செயலாளர், துணை செயலாளர், மகளிர் துணை செயலாளர், ஆதிதிராவிடர் பிரிவு துணை செயலாளர், பொருளாளர் மற்றும் 5 மேலமைப்பு பிரதிநிதிகள் என, 11 பொறுப்புக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.இவர்களில், செயலாளரும், மேலமைப்பு பிரதிநிதிகளும் சேர்ந்து பகுதி கழக பொறுப்பாளர்களை தேர்வு செய்வர்.
இவ்வாறு படிப்படியாக தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்,பகுதி கழகங்களை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வார்டுகளில் செயல்படக்கூடிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. உள்ளடி வேலை பார்த்தவர்களை கட்சியை விட்டு நீக்குவதற்கு பதில், பதவி வழங்காமல் இருந்தால் போதும்; அவர்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.