பல்லடம் : பல்லடம் அருகே ஸ்டேட் வங்கி கிளையில், நகை மதிப்பீட்டாளரின் நூதன மோசடி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததால், அவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேத்தனூர் ஸ்டேட் வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளாக வேலை பார்ப்பவர் சேகர். சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜல்லிபட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர், வங்கியில் தான் அடகு வைத்த நகையை மீட்டார்.நகை எடை குறைவாக இருந்ததை தொடர்ந்து, காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடந்த நிலையில், பலரது நகையும் எடை குறைவாக இருப்பது தெரியவந்தது.இதையறிந்த வாடிக்கையாளர்கள் கடந்த இரு நாட்களாக வங்கியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கியின் முதன்மை மேலாளர் கனகராஜ் கூறுகையில், ''வாடிக்கையாளர்களின் புகார் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதால், நகைகளை சரிபார்க்கும் பணியிலும் சிக்கல் உள்ளது,'' என்றார்.
நகை அடமானம் வைத்த வாவிபாளையம் ஞானசிவமூர்த்தி கூறுகையில், ''கடந்த ஆண்டு ஜூன் மாதம், 2 நகை அடகு வைத்தேன். பணத்தை கட்டி நகையை திருப்பிய போது, எடை குறைவாக இருந்தது தெரிந்துள்ளது. செயினில் உள்ள ஒரு சில வளையங்களை நகை மதிப்பீட்டாளர் துண்டித்துள்ளார். மதிப்பீட்டாளர்சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நகை மதிப்பீட்டாளர் சேகர், 2017 முதல் வங்கியில் பணியாற்றுகிறார். குடும்பத்துடன் திருப்பூர் அருகே வீரபாண்டியில் வசித்து வருகிறார். நகை கடனுக்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்த வகையில், கடந்த ஆண்டு மாவட்ட அளவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
நகை மோசடி புகார் வந்ததால், நேற்று முன்தினம் இரவோடு இரவாக சேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.