புதுடில்லி : ஐ.ஓ.சி., எனப்படும் 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.அதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
![]()
|
இந் நிலையில் ரஷ்யா, புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விலையைவிட குறைந்த விலையில், அதிக தள்ளுபடியுடன், கச்சா எண்ணெய் விற்க தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனம் 30 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் இன்று (மார்ச் 19)இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சர்வதேச விலையில் இருந்து ஒரு பேரலுக்கு 20 முதல் 25 டாலர்கள் குறைவாக கச்சா எண்ணெய் நமக்கு கிடைக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை, இந்த விஷயத்துக்கு பொருந்தாது நிபுணர்கள் கூறுகின்றனர்.