கீவ்: நூற்றுக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் போரில் மடியும் நிலையிலும் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கலங்காமல் தைரியமாக ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

உக்ரைனில் தற்போது இருபத்தி மூன்றாவது நாளாக ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. 600க்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் இந்த போரில் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உடன்படவில்லை என்றால் ரஷ்ய நாட்டில் உக்ரைன் ஏற்படுத்தும் தாக்குதலில் இருந்து மீள இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒளி வேகத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும் ஹைபர்சானிக் ஏவுகணைகள் கொண்டு இவனோ பகுதியிலுள்ள மிகப்பெரிய ராணுவ பதுங்கு குழியை தகர்த்ததாக முன்னதாக ரஷ்யா தகவல் வெளியிட்டது.
உக்ரைன் ராணுவ தகவல்களை பரிமாறும் ரேடியோ நிலையம் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உடனுக்குடன் இந்த தகவல்களை உக்ரைன் நிர்வாகிகளிடம் கேட்டு உறுதிப்படுத்த முடியாமல் போனது.
நாட்டைவிட்டு வெளியேற விரும்பும் குடிமக்களுக்கு 10 வழித்தடங்களை உருவாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரியபோல் பகுதியில் உள்ள திரையரங்கில் தஞ்சம் புகுந்த குடிமக்கள் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.தாங்கள் குடிமக்களை தாக்க முயலவில்லை என்று தெரிவித்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க உக்ரைன் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக தெரிவித்து வரும் ஜெலன்ஸ்கி அவ்வபோது பத்திரிகையாளர்களை சந்திப்பது, மருத்துவமனை சென்று குடிமக்களை சந்திப்பது என்று பிஸியாக உள்ளார்.
உக்ரைன் ராணுவம் ரஷ்யப் படைகளை தொடர்ந்து முறியடித்து வருவதாகவே அவர் தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யாவுக்கு தற்போது பகிரங்க எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் உக்ரைன் நாட்டுக்குள் உண்மையான நிலைமை என்ன என்று சர்வதேச ஊடகங்களால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.