சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஏற்கனவே எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், 'டிமிக்கி' கொடுத்து வந்த அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி கமிஷன் முன், இன்று விசாரணைக்கு ஆஜரானார். சசிகலா அண்ணன் மனைவி இளவரசியும் ஆஜரானார். ஜெயலலிதா மரண விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2016ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தார். திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும், பலனின்றி அதே ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார்.
போர்க்கொடி
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சசிகலா நெருக்கடியால், முதல்வர் பதவியில் இருந்த விலகிய பன்னீர்செல்வமும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார்.இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை, அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.
இந்த கமிஷன், சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில் செயல்பட்டு வருகிறது. இதுவரை, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், 2019ல் விசாரணை நிறுத்தப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவ குழுவினருடன் விசாரணையை தொடர, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மருத்துவ குழு
அதன்படி, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் உள்ளிட்ட ஆறு பேர் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில், அப்பல்லோ மருத்துவர்கள் கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. இதன்படி, இளவரசி இன்று காலை 10:00 மணிக்கும்; பன்னீர்செல்வம் 11:30 மணிக்கும் ஆஜராகினர்.
எதிர்பார்ப்பு
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி இருந்தார்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தினார். சசிகலா சிறைக்கு சென்ற பின், ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது.இதையடுத்து, முதல்வரான பழனிசாமியுடன், பன்னீர்செல்வம் கைகோர்த்து துணை முதல்வரானார். அப்போது, விசாரணைக்கு ஆஜராகும்படி எட்டு முறை சம்மன் அனுப்பியும், பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், 'டிமிக்கி' கொடுத்து வந்த பன்னீர்செல்வம், இன்று ஆஜராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவரது வழக்கறிஞர்களும் கமிஷனில் வந்து நடைமுறைகளை கேட்டறிந்தனர்.
எதிர்பார்ப்பு
ஜெயலலிதா மரண விவகாரத்தில், புதிய தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆஜராகி இருப்பதால், விசாரணையை விரைந்து முடித்து, ஆறுமுகசாமி கமிஷன், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இதன்பின், ஜெயலலிதா மரண விவகாரத்தில் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.