குருகிராம்-சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்ட உத்தர பிரதேச இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 25 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.ஹரியானாவின் குருகிராமில் சட்டவிரோத ஆயுத விற்பனை நடப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி - ஜெய்ப்பூர் சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் நேற்று கூறியதாவது:கைது செய்யப்பட்ட அபிஷேக், 20, அலிகாரை சேர்ந்தவர். சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.சட்டவிரோத ஆயுதங்களை அவர் யாரிடம் கொள்முதல் செய்தார், யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.