மும்பை : ''ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது'' என சிவசேனா தலைவரும் மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் சமீபத்தில் கூறுகையில்'எங்களை பா.ஜ.வின் 'பி டீம்' என்று கூறுகின்றனர். பா.ஜ.வுக்கு எதிராகஆளும் கூட்டணியில் இணைய நாங்கள்தயார்' என்றார்.
இதை சிவசேனா ஏற்க மறுத்து 'ஓவைசி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை' என கூறியது. இந்நிலையில் சிவசேனா தொண்டர்களுடன்'வீடியோ கான்பரன்சிங்' வழியாக முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பேசினார்.

அவர் கூறியதாவது: ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பா.ஜ.வின் பி அணி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சிவசேனாவுடன் கூட்டணி என ஓவைசி கட்சி கூறியுள்ளதன் பின்னணியில் பா.ஜ.வின் சதி அடங்கியுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி என்பது நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.