சென்னை: மாநகராட்சியில் சுகாதாரமற்ற, முகம் சுளிக்க செய்யும் இடங்களை கண்டறிந்து, 100 கோடி ரூபாய் மதிப்பில், 500 கழிப்பறைகள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில், 866 இடங்களில், 7,471 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். கழிப்பறைகள் பராமரிப்பு பணிக்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது.ஆனாலும், மாநகராட்சியின் அனைத்து கழிப்பறைகளும் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையிலும், கடும் துர்நாற்றத்துடன் உள்ளன. பெரும்பாலான கழிப்பறைகள், மது அருந்துவோரின் புகலிடமாகவும், குற்றச் செயலுக்கு பிறப்பிடமாகவும் உள்ளன.
இது ஒருபுறம் இருந்தாலும், தினசரி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் வகையில், இதற்கு முந்தைய கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள், மாநகராட்சி கழிப்பறையை ஆக்கிரமித்தனர். அவர்களின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தாலும், கழிப்பறை கட்டண லாபம் தொடர்ந்தது.
அதன்படி, சிறுநீர் கழிக்க 5 ரூபாய்; கழிப்பறைக்கு 10 ரூபாய் என, தினசரி 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.கழிப்பறை முறைகேடுகளை சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் அடிக்கடி செய்திகள் வெளியாயின. குப்பை, பூங்கா பராமரிப்புகளை தனியாரிடம் ஒப்படைத்ததை போல, கழிப்பறை பராமரிப்பையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என, நம் நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.அந்த கூட்டத்தில், கழிப்பறை பராமரிப்பு மற்றும் தேவையான இடங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், மக்கள் தொகைக்கு ஏற்ப கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். மாநகராட்சியில் தற்போது கழிப்பறைகள் போதிய அளவில் இல்லை. எனவே, கூடுதலான கழிப்பறைகள் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கட்டப்படும். இது குறித்து ஆலோசனை நடந்துள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதிலும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும். குறிப்பிட்ட இடங்களில், முன்மாதியாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கழிப்பறைகளில் இருந்து துர்நாற்றம் வீசாத வகையில், சூரிய ஒளி உள்ளே படும் அளவிற்கும் பாதுகாப்புடனும் ஜன்னல்கள் அமைக்கப்படும்.இதற்கான வடிவமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தெந்த இடங்களில், எத்தனை கழிப்பறை வேண்டும் உள்ளிட்டவை குறித்து அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை பட்டியல் வந்தவுடன், பேருந்து நிறுத்தங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் அருகில் கழிப்பறைகள் கட்டாயம் இடம்பெறும்.
அதன்படி, மாநகர் முழுதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் 100 கோடி ரூபாய் செலவில் கழிப்பறைகள் கட்டப்படும். இந்த கழிப்பறைகள் முதற்கட்ட பரிசோதனையாக, இரண்டு மண்டலங்கள் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.அவை திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், அனைத்து கழிப்பறைகளும் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படும்.புதிய கழிப்பறைகள் குறித்த அறிவிப்பு வரும் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இந்த புதிய கழிப்பறைகளுக்கு தமிழக அரசு போதிய அளவிலான நிதி தருவதாக தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -