சென்னை: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மேலும், இதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து உள்ளது. கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழகம் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேகதாது விவகாரத்தில், கர்நாடகாவின் தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி அனைவரும் ஒரே அணியாக உள்ளனர். தமிழக சட்டசபையிலும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அனைவரும் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இன்ற முதல்வர் ஸ்டாலின் அரசு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.
கர்நாடகாவின் 10 முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். தமிழக சட்டசபையில், மேகதாது அணைக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக.,வும், திமுகவின் தீர்மானத்திற்கு அதிமுக.,வும் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை காக்கும் அதே நேரத்தில் உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துகிறார்கள். தண்ணீருக்காக ஒரு பக்கம் கேரளாவுடனும், மறுபக்கம் கர்நாடகாவுடன் கையேந்தும் நிலையில் உள்ளது.
காவிரி விவகாரத்தில் பல முதல்வர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். காவிரி பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிரச்னை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்., 16 அன்று அளித்த தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநில அனுமதியையும், மத்திய அரசு அனுமதியையும் பெறாமல் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசிற்கு தமிழக சட்டசபையின் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அனுமதியையும் தரக்கூடாது என மத்திய அரசை கேட்டு கொள்கிறோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக

இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது: மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக அதரவு அளிக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் பல சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதிமுக அரசின் அழுத்தத்தால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என நான் முதல்வராக இருந்த போது பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது அணையால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.,
பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாஜ ஆதரவு அளிக்கிறது. தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாஜ முழு ஆதரவை அளிக்கும். தனிப்பட்ட முறையிலும், இது குறித்து பா.ஜ., சார்பில் வலியுறுத்துவோம் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. மத்திய அரசு அனுமதியை தருவதை ஏற்று கொள்ள மாட்டோம். கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு தடுக்கும். அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கும். அணை கட்டும் முயற்சியை அனைத்து வடிவிலும் எதிர்ப்போம். காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.