சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
பன்னீர்செல்வம் மேலும் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த விவரம் எனக்கு தெரியாது. என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற தகவல் இல்லை. செப்.,22ல் எதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தெரியாது. அப்போது, நான் சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவில் உதவியாளர் கூறிதான் விவரம் தெரியும். மறுநாள் தலைமை செயலாளரை நேரில் சந்தித்து தகவல் அறிந்தேன்.
2016 செப்.,22க்கு பிறகு ஜெயலலிதாவை நேரில் சந்திக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய நாள், மெட்ரோ ரயில் நிலைய விழாவில் தான் அவரை பார்த்தேன். அவருக்கு அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருந்தது என்பதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் இருந்தது குறித்து தெரியாது.

எதனடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பொது மக்களின் எண்ணங்கள் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்து போட்டேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.