புதுடில்லி: பஞ்சாபில் இருந்து காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதில், சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மொத்தம் 7 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். அதில் காங்கிரசின் பிரதாப் சிங் பாஜ்வா, எஸ்எஸ் துலோ, பாஜ.,வின் ஷூவைத் மாலிக், சிரோன்மணி அகாலிதளத்தின் நரேஷ் குஜரால்,சன்யுக்த் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாபில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், 5 இடங்களையும் ஆம் ஆத்மி கைப்பற்ற உள்ளது. தொடர்ந்து, அந்த இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், டில்லியின் ராஜிந்தர் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ராகவ் சத்தா, டாக்டர் சந்தீப் பதக்(இவர் ஆம் ஆத்மிக்காக பஞ்சாபில் 3 ஆண்டு பூத் மட்டத்தில் பிரசாரம் செய்தவர்), அசோக் மிட்டல்( ஆம் ஆத்மியின் கல்வி தொடர்பான வாக்குறுதியில் பணியாற்றியவர்) சஞ்சிவ் அரோரோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
