சென்னை:நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முதல் முறையாக ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை நடந்த சம்பவங்கள் தொடர்பான பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது... தெரியாது...' என்றே பதில் அளித்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என தெரிவித்த அவர், சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்லும்படி கூறியதாகவும் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் நேற்று மூன்று மணி நேரம் நடந்த விசாரணை, இன்றும் தொடர்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை, 2017ல் அ.தி.மு.க., அரசு அமைத்தது. சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால், 2019-ல் நிறுத்தப்பட்ட விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மீண்டும் துவங்கியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணி இளவரசி ஆகியோர், சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்தில்,ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.காலை 11:30 முதல் மதியம் 1:30 மணி வரையும், மாலை 3:௦௦ முதல் 4:௦௦ மணி வரையும் என மொத்தம் மூன்று மணி நேரம், பன்னீர்செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
ஜெ மரணம்
எனக்கு எதுவும்
தெரியாது !
பன்னீர் பதில்
........
அவரிடம் மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளை, நீதிபதி ஆறுமுகசாமியும், ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சனும் கேட்டனர். இடையிடையே, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் சில சந்தேகங்களை, நீதிபதியிடம் எழுப்பினார். இந்த விசாரணையின் போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும் பங்கேற்றனர்.
விசாரணை விபரம்:
நீதிபதி: மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, காவிரி பிரச்னை குறித்த கூட்டம் நடந்தது தெரியுமா?
பன்னீர்செல்வம்: தெரியாது. அது தொடர்பான அறிக்கை வந்த பின்னரே தெரியவந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற, அன்றைய தலைமை செயலர் ராம்மோகன் ராவிடம் கேட்டதற்கு, முதல்வர் தனக்கு விவரித்ததாக கூறினார்.
நீதிபதி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, எப்போது தெரியும்?
பன்னீர்செல்வம்: 2016 செப்டம்பர் 22-ல், எதற்காக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அப்போது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவில் உதவியாளர் வாயிலாக தகவல் கிடைத்தது. மறுநாள் பிற்பகலில், அப்பல்லோ மருத்துவமனை சென்றேன். அங்கு இருந்த தலைமை செயலர் ராம்மோகன் ராவிடம் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.
நீதிபதி: ஜெயலலிதா உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்தும் உங்களுக்கு தெரியுமா? எப்படி தெரிந்து கொண்டீர்கள்?
பன்னீர்செல்வம்: ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அன்றைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக தெரிந்து கொள்வேன். காவிரி குறித்த கூட்டத்திற்கு பின், ஜெயலலிதாவுக்கு இதய பிரச்னை ஏற்பட்டு, உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டதும் எனக்கு தெரியாது. ஆனால், ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், விஜயபாஸ்கரிடம் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு இருந்ததாக கூறினார்.
நீதிபதி: இதய பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது; எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்; அது தொடர்பான முடிவுகளை யார் எடுத்தது?
பன்னீர்செல்வம்: எனக்கு எதுவும் தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதாவை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?
பன்னீர்செல்வம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் நடந்த, மெட்ரோ ரயில் துவக்க விழாவில் பார்த்தேன். அதன்பின், அவரை பார்க்கவில்லை.
நீதிபதி: அவருக்கு என்னென்ன நோய்கள் இருந்தன?
பன்னீர்செல்வம்: சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது என்பதை தவிர, அவருக்கு இருந்த நோய்கள் குறித்து எனக்கு தெரியாது.
நீதிபதி: சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியது முதல் துணை முதல்வரானது வரை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீங்கள் கூறியதெல்லாம் சரிதானா?
பன்னீர்செல்வம்: சரிதான். பொது மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கான கோப்பில், துணை முதல்வர் என்ற வகையில் நானும் கையெழுத்திட்டேன்.
நீதிபதி: சிகிச்சைக்காக, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்ல வலியுறுத்தினீர்களா?
பன்னீர்செல்வம்: அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போல, ஜெயலலிதாவையும் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லலாம் என, அன்றைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன். 'அப்பல்லோ டாக்டர்களிடம் பேசிய பின் முடிவெடுக்கலாம்' என, விஜயபாஸ்கர் கூறினார். அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்தபோது, 'ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குணமடைந்து வீடு திரும்புவார்' என்றார்.
நீதிபதி: வெளிநாடு அழைத்து செல்வது பற்றி, அப்போதைய தலைமை செயலர், உங்களிடம் அனுமதி கேட்டாரா?
பன்னீர்செல்வம்: ராம்மோகன் ராவ் என்னிடம் எதுவும் பேசவில்லை. அப்படி கேட்டிருந்தால், உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன்.
நீதிபதி: அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்களை அணைத்து வைக்குமாறு கூறினீர்களா?
பன்னீர்செல்வம்: அப்படி நான் எதுவும் கூறவில்லை.
நீதிபதி: 'அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை, அனைத்து நியமனங்களும் சசிகலாவுக்கு தெரியாமல் நடக்காது' என, சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கூறியிருக்கிறாரே?
பன்னீர்செல்வம்: அனைத்து நியமனங்களையும் ஜெயலலிதாவே மேற்கொள்வார்.
நீதிபதி: சசிகலா உறவினர் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி, ஜெயலலிதா சிகிச்சை விபரங்களை குறிப்பெடுத்து சென்றாரா?
பன்னீர்செல்வம்: எனக்கு தெரியாது.இவ்வாறு விசாரணை நடந்தது.
இன்று மீண்டும் விசாரணை
பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்ட, 78 கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு, 'தெரியாது... தெரியாது...' என்றே பதிலளித்தார். மாலை 4:௦௦ மணியளவில் மின் தடை ஏற்பட்டதால், விசாரணை தடைபட்டது. 40 நிமிடங்கள் காத்திருந்தும், மின் தடை சரியாகாததால், பன்னீர்செல்வத்திடம், 'இன்று விசாரணை நடைபெறும்' என, நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்தார். பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் எமிலியாஸ், திருமாறன், காசிராஜன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஆஜராகினர்.
'சசிகலா மட்டுமே'
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான, சசிகலாவின் அண்ணி இளவரசி அளித்த வாக்குமூலம்:
மருத்துவ மனையில் ஜெயலலிதாவை, சசிகலா மட்டுமே உடனிருந்து கவனித்து கொண்டார். சிகிச்சையில் இருந்தபோது, ஓரிரு முறை கண்ணாடி வழியாகவே ஜெயலலிதாவை பார்த்தேன். ஜெயலலிதா வீட்டில் நான் தங்கியிருந்தாலும், தனிப்பட்ட விஷயங்களை, என்னிடம் கூறியதில்லை. கடந்த 2014-ல் ஜெயலலிதாவுடன் சிறை சென்றேன்.அதன்பின், அவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடல்நலம் பாதித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement