
கடந்த 20 ம் தேதி
இந்தக் கோடையின் ஆரம்பத்திலும் அதிசயமாக ‛அசானி' என்று பெயரிடப்பட்ட புயல் வருவதற்கான அறிகுறியாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்கும் பாக் ஜலசந்தி கடல் கால்வாயை, ஆட்டிசம் நோய் பாதித்த வாய் பேச இயலாத பதிமூன்று வயது சிறுமி அநாயசமாக நீந்திக்கடந்து கொண்டிருந்தார்.
யார் இந்த சிறுமி
மும்பையில் உள்ள இந்திய கடற்படை பிரிவில் பணியாற்றுபவர் மதன்ராய், இவரது மனைவி ரெஜினா ராய்.இவர்களது மகள் ஜியாராய்.இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். மூளை வளர்ச்சி குறைபாடுகளுடன் வளரும் குழந்தைகளை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாக கருதுவர். பத்து வயது குழந்தையின் செயல்பாடு இரண்டு வயது குழந்தையின் செயல்பாட்டுடன் ஒத்திருக்கும்.

.தற்போது இந்திய கடற்படையினருக்கான பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஜியாராய்க்கு சிறு வயது முதலே நீச்சலில் ஆர்வம் அதிகம்.இதை கவனித்த பெற்றோர் சிறுமிக்கு நீச்சல் பயிற்சி வழங்கினர்.இதன் காரணமாக நீச்சலில் பல சாதனைகள் புரிந்தார்.சிறுமியைப் பற்றி கேள்ளவிப்பட்ட பிரதமர் மோடி தமது ‛மான் கி பாத் ரேடியோ' நிகழ்வில் சிறுமியை பாராட்டி பேசினார்.
சர்வதேச நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாராக இருந்தாலும் இந்தியா-இலங்கைக்கு இடையே உள்ள கடல்பகுதியை கடந்து சாதனை புரிய விரும்புபவர்.ஜியாராயும் அந்த சாதனை புரியட்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டனர்.இரு நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஜியாராய் களத்தில் இறங்கினார் கடலில் நீந்தினார்.
இலங்கையின் தலைமன்னார் பகுதியில் தனது நீ்ச்சலை ஆரம்பித்தவர் இந்தியாவின் தனுஷ்கோடி அருகில் உள்ள அரிச்சல் முனையில் கரையேறினார்.மொத்தம் உள்ள 29 கிலோமீட்டர் துாரத்தை பதிமூன்று மணி நேரம் பத்து நிமிடத்தில் கடந்தார்.2004-ல் புலா சவுத்ரி என்ற பெண் இதே துாரத்தை 13 மணி நேரம் 52 நிமிடத்தில் கடந்ததுதான் இதுவரையிலான சாதனையாக இருந்தது.இப்போது ஜியாராய் இந்த சாதனையை நாற்பது நிமிடம் முன்கூட்டியே வந்து முறியடித்து அதிவேக நீச்சல் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார்.சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறுமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

ஜியாராய் கடந்த வந்து பாதையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கடல்வாழ் உயிரினங்களும் அதிகம் உண்டு கடல் கொந்தளிப்போடு கடல் வாழ் உயிரினங்களின் ஆபத்தையும் கடந்து இவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டு பாராட்டினார்.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஆட்டிசம் சங்கம் உள்ளிட்ட பல முகமைகளின் ஒத்துழைப்புடன் இந்திய மாற்றுத் திறனாளி நீச்சல் கூட்டமைப்பு இந்த நிகழ்வை நடத்தியது.
இந்த அற்புதமான சாதனைக்காக செல்வி ஜியா ராய் மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு கப்பற்படையின் வைஸ் அட்மிரல் பகதூர் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.கௌரவமிக்க பிரதமரின் தேசிய பாலர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள செல்வி ஜியா ராய் உலகின் அனைத்து கடல்களிலும் நீந்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
-எல்.முருகராஜ்