விருதுநகர்:விருதுநகரில் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த பாலியல் விவகாரத்தில் அரசியல் புள்ளிகள், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்புள்ளதா என விசாரிக்க, கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ரகசிய 'வீடியோ'
விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், கார்மென்ட்ஸ் டெக்னாலஜி படித்து, சூலக்கரை பகுதி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார். அதே பகுதி, பாண்டியன் நகர் தேவர் சிலை அருகில், அவர் பணிக்கு செல்ல வேன் ஏறுவது வழக்கம். அங்கு வரும் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், 27, தான் மாட்டு பண்ணை, மெடிக்கல் குடோன் வைத்திருப்பதாகவும், அப்பெண்ணை காதலிப்பதாகவும் கூறி உள்ளார். இருவரும் தினமும் போனில் பேசி வந்தனர். ஒரு வாரம் கழித்து, பெத்தனாட்சி நகரில் உள்ள தன் மெடிக்கல் குடோனுக்கு அப்பெண்ணை வரவழைத்த ஹரிஹரன், அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதை ரகசியமாக 'வீடியோ'வும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்த போது, வீட்டில் வந்து பெண் கேட்கும்படி, ஹரிஹரனிடம் கூறி உள்ளார். ஹரிஹரன் மறுக்கவே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, பெண்ணின் மொபைல் போனுக்கு, இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை ஹரிஹரன் அனுப்பி உள்ளார்.அந்த வீடியோவை காட்டி மிரட்டி, ஹரிஹரனின் நண்பர்களான 18 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள், பிரவீன், 22, மாடசாமி, 37 என, ஏழு பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துஉள்ளனர்.
சில நாட்களுக்கு பின், மீண்டும் ஹரிஹரன் அழைத்துள்ளார். அப்போது, 'திருமணம் நிச்சயமாகி விட்டது; என்னை விட்டுவிடு' என, இளம்பெண் கெஞ்சி உள்ளார். கடைசியாக ஒருமுறை வரும் படியும், வீடியோவை அழித்து விடுவதாகவும் ஹரிஹரன் கூறி உள்ளார். இதை நம்பிய அப்பெண், மீண்டும் மெடிக்கல் குடோனுக்கு சென்றார்.கட்சியில் இருந்து நீக்கம்அங்கு ஹரிஹரனின் நண்பரான தி.மு.க., வார்டு இளைஞரணி அமைப்பாளர் ஜூனத் அகமது, 27, பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
இதையடுத்து, மார்ச் 18ல் ஹரிஹரன் மீண்டும் இளம்பெண்ணிற்கு போன் செய்து, மெடிக்கல் குடோனுக்கு வரும்படி அழைத்துள்ளார். மறுத்த இளம் பெண்ணிடம், 'வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன்' என, மிரட்டிஉள்ளார்.இதையடுத்து, பெண்கள் உதவி எண் 181ல், அப்பெண் புகார் செய்தார். அங்கிருந்து போலீசாருக்கு தகவல் அளிக்க, ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி, நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண், சமூக நலத்துறையினர் பராமரிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஜூனத் அகமதுவை, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, இந்த பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்வதற்காக கோப்புகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருவதாக, எஸ்.பி., மனோகர் தெரிவித்தார்.
போலீசார் முடிவு
இதற்கிடையே, ஜுனத் அகமதுவை போல, தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, இளம்பெண் விருந்தாக்கப்பட்டாரா; ஆபாச வீடியோவை இந்த கும்பல் வேறு யாருக்காவது அனுப்பினரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து விசாரிக்க, கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனத் அகமது உள்ளிட்டோரை, காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.