சென்னை மாநகராட்சியில் அமைக்கப்படும் உட்புற மற்றும் பேருந்து சாலைகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை உறுதியுடன் இருக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தரத்தில் சமரசம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 387 கி.மீ., நீளத்துக்கு 471 பேருந்து சாலைகளும், 5,270.33 கி.மீ., நீளத்துக்கு 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த அதீத கன மழையால், 1,000க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்தன.அவற்றை சீரமைக்க, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி காரணமாக பணி நிறுத்தப்பட்டது.

தேர்தல் முடிந்தபின், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கி நடந்து வருகின்றன. அதன்படி, 311.46 கி.மீ., நீளமுள்ள 1,654 பேருந்து மற்றும் உட்புற சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில், 132.07 கி.மீ., நீளத்தில் 615 சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும், 136.99 கி.மீ., நீளமுடைய 799 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 42.32 கி.மீ., சாலைகள் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், போடப் படும் சாலைகள் தரமானதாகவும், உறுதியுடனும் இருக்க வேண்டும் என, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
எச்சரிக்கை:
தரத்தில் சமரசம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைகளின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது: சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, கோடைக்காலம் சிறந்ததாக உள்ளது. எனவே, சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.

சென்னை மாநகரின் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள, மலைகளில் இருந்து பெறப்படும் ஜல்லி கற்களை கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிதாக போடப்படும் உட்புற சாலைகள், பேருந்து சாலைகள் மூன்றாண்டு வரையாவது பயன்படுத்த கூடிய வகையில் இருத்தல் அவசியம். தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலையின் உறுதி தன்மை குறித்து, துணை கமிஷனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சாலை அமைக்கும்போதே போக்குவரத்துக்கான வழிக்காட்டுதல் கோடு, சென்டர் மீடியன் மற்றும் வலது மற்றும் இடதுபுறம் இருக்கும் சுவர்களில், விபத்துகள் ஏற்படாத வகையில், இரவிலும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வழிக்காட்டுதல் இருத்தல் அவசியம். மேலும், சாலையோர சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதை பொதுமக்கள் கண்டறிந்தாலும் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -