உணவுப் பாதுகாப்புத்துறையின் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து, சென்னை வடபழனி முருகன் கோவில் பிரசாதகடைகான்ட்ராக்டரிடம் கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. அதேவேளையில், தரச்சான்றுபெற்ற கடையிலும் சோதனை நடத்தியதுடன், பிரசாத பொருட்களின் மாதிரி சேகரித்து ஆய்வறிக்கை பெறாமலே கடைக்கு 'சீல்' வைத்த பின்னணி குறித்த தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கடந்த பிப்ரவரி, 16ம் தேதி சென்னை, வடபழனி முருகன் கோவிலுக்கு வந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கிருந்த பிரசாத ஸ்டாலை ஆய்வு செய்கிறார்கள். அப்போது, கோவிலில் நிற்கக்கூட இடமில்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம். கும்பாபிஷேகம் முடிந்து மண்டல அபிேஷகம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு நடுவேதான் அதிகாரிகளின் ஆய்வும் நடக்கிறது. இது குறித்து தகவலறிந்த கோவில் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
அவர்களிடம், 'கடைக்கான உணவு பாதுகாப்பு மற்றும்தரச்சான்றிதழ் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இவர்களுக்கு கடை நடத்த எப்படி அனுமதி அளித்தீர்கள்' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு கடைக்காரர், 'கொரோனா ஊரடங்கு காலத்தில், 102 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. பிரசாத கடைக்கான உரிமம் அந்த நாட்கள்அளவில் செல்லத்தக்கதாகவே இருந்தது. 'ஊரடங்கு முடிந்து கோவில்கள் திறக்கப்பட்டபின், மேற்கண்ட 102 நாட்களுக்கான இழப்பினை ஈடுகட்டிக்கொள்ளலாம் என, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது. 'இந்த சமயத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் காலாவதியாகியிருந்தது; அதை புதுப்பிக்க அரசு அலுவலகமும் திறந்திருக்கவில்லை.
அடுத்தடுத்து சோதனை'

தற்போது காலாவதியாகியிருக்கும் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளோம்; விரைவில் வந்துவிடும். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வருமானமில்லை. 'எனவே, தற்போதைய பக்தர்கள் கூட்டத்தில்தான் அந்த இழப்பினை ஈடுகட்டிக்கொள்ள முடியும். எனவே, பழைய உரிமத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, அதை கடைபிடித்து கடையை நடத்திக்கொள்ள அனுமதியுங்கள்' என்றனர்.
ஆனால் அதிகாரிகளோ, 'விதிமுறைகளின்படி நீங்கள் தலையில் தொப்பி அணிந்திருக்கவில்லை. பிரசாத பிளாஸ்டிக் கவரின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி பிரிண்ட் செய்யப்படவில்லை. அதற்கு மாறாக, ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறீர்கள். எனவே, கடையை மூடுங்கள்' என, தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில் அலுவலர்கள் கடைக்காரரிடம், 'கடையை இப்போது மூடிவிட்டு உரிமத்தை புதுப்பித்தபின் வந்து திறங்கள்' எனக்கூறி அனுப்பிவிட்டனர்.
இச்சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பின், அதாவது, மார்ச் 13ம் தேதி, இதேஅதிகாரிகள் குழு மீண்டும் கோவிலுக்கு வருகிறது. 'நாங்கள் அலுவல் ரீதியாக வரவில்லை; என்ன நடக்கிறது என, பார்க்க வந்தோம்' எனக்கூறி, கோவில் வளாகத்தில், சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கும் கூடமான, 'மடப்பள்ளி'க்கும், அன்னதான உணவு தயாரிக்குமிடத்திற்கும் சென்றனர்.
மடப்பள்ளியில் இருந்த ஊழியர்கள், 'இங்கு வெளியாட்கள்வர அனுமதியில்லை' எனக்கூறினர். அதைப்பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தனர் அதிகாரிகள்.
உள்நோக்கம்
புதிதாக கட்டப்பட்டுள்ள மடப்பள்ளி என்பதால், குறை சொல்லி 'சீல்' வைக்க எதுவுமே இருக்கவில்லை. இதனால், 'பாத்திரங்களை வெந்நீரில் ஏன் கழுவுவதில்லை; வெந்நீர் தயாரிப்பதற்கான 'கீஸர்' எங்கே உள்ளது; உணவு தயாரிக்க மினரல் வாட்டர்தான் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் மினரல் வாட்டர் கேனில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை; இதைத்தான் பயன்படுத்துகிறீர்கள். அடுத்த முறை வரும்போது, வெந்நீர் தயாரிப்பதற்கான 'கீஸர்' இருக்க வேண்டும். மினரல் வாட்டர் கேனில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இருந்தால் மட்டும் போதாது, காலாவதி தேதி அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என, எச்சரித்துவிட்டு சென்றனர்.
இப்படி ஒரே கோவிலில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டதற்கு, உணவுப்பாதுகாப்புத்துறை தரப்பில் ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ என விசாரித்தபோதுதான், கோவிலில் மண்டல அபிஷேகத்தின் போது நடந்த ஒரு சம்பவம் புலப்பட்டது.
கடந்த பிப்ரவரி 10ம் தேதி, மண்டல அபிஷேகத்தின் போது, பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்த வேளையில், உணவுப்பாதுகாப்புறை உயரதிகாரி, சிலருடன் கோவிலுக்கு வந்துள்ளார். மூலவர் சன்னதி 'கேட்' திறந்து உள்ளே, சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்குமாறு, அங்கிருந்த கோவில் அலுவலரிடம் கேட்டுள்ளார்.
இவரை பற்றி அறிந்திராத கோவில் அலுவலர், 'ஐயா... இது 100 ரூபாய் டிக்கெட் பெற்று பக்தர்கள் உள்ளே நுழையும் வழி. இலவசமாக யாரையும் அனுமதிக்க முடியாது; கோவிலுக்கு கிடைக்கும் வருவாயை தவிர்த்திட எனக்கு அதிகாரமில்லை. அதுமட்டுமில்லாமல், கட்டணம் செலுத்திய பக்தர்கள் இரண்டு மணி நேரமாக காத்திருக்கும் நிலையில், உங்களை மட்டும் முறைதவறி அனுமதித்தால் எனது மேலதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவார்கள். நீங்கள் வேண்டுமானால், கோவில் உயரதிகாரிகளை பார்த்து வாருங்கள்' எனக்கூறியுள்ளார்.
உரிமம் இருந்தும் 'ரெய்டு!'
ஆத்திரமடைந்த உணவுப்பாதுகாப்புத்துறை உயரதிகாரி, 'என்னையே, கோவில் உயரதிகாரிகளை போய் பாருங்கள் என்கிறீர்களா...' எனக்கேட்டு வாக்குவாதம் செய்ய, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில் ஊழியர்கள், அவரை சமாதானப்படுத்தி இலவச சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அவரும், உடன் வந்தவர்களும் டிக்கெட் கட்டணமின்றி இலவசமாகவே சுவாமி தரிசனம் செய்தனர்.
அதுமட்டுமின்றி கோவில் குருக்களை வைத்து எனக்குமாலை மரியாதை செலுத்த வேண்டும் எனக்கேட்டு பெற்றுக்கொண்டு, திரும்பிச் செல்லும் போது கோவில் அதிகாரியிடம், 'எனது பவர் தெரியாமல் விளையாடிவிட்டீர்கள். நான் யார் என்று காட்டுகிறேன்...' என, மிரட்டிச் சென்றார்.
அதன்பின், அதே உணவு பாதுகாப்புத்துறை உயரதிகாரி, தன் குடும்பத்துடன் மார்ச் 22ல், மீண்டும் கோவிலுக்கு வந்தார். 'கட்டண முறை தரிசன வழியில் செல்ல டிக்கெட் பெற மாட்டேன். மூலவர் சன்னதிக்குள் அழைத்துச் சென்று மரியாதை செலுத்த வேண்டும்' என்றார்.
அதற்கும் கோவில் அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.தரிசனம் முடித்த அவர், பிரசாதக் கடை திறந்திருப்பதைக்கண்டு, 'இந்த கடை எப்படி வந்தது' என, கேட்டுள்ளார்.
அதற்கு கோவில் அலுவலர்கள், 'உரிமம் இல்லாததால்தான் நீங்கள் கடந்த முறை ரெய்டு நடத்தி கடையை மூடச் சொன்னீர்கள். கடந்த 9ம் தேதி, உரிமம் பெற்று எங்களிடம் சமர்ப்பித்தனர். உங்கள் துறையில் இருந்துதான் அதற்கான உத்தரவும் தந்துள்ளனர். அதனால்தான், கடை நடத்திட அனுமதித்தோம்' எனக்கூறியுள்ளனர்.
0இதில் திருப்தியடையாத அந்த உயரதிகாரி, தான் குடும்பத்துடன் வந்திருப்பதால் அன்றைய தினம் எதுவும் செய்யவில்லை. அடுத்த நாள், அதாவது, மார்ச், 23ம் தேதி, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளை கோவிலுக்கு அனுப்பி கடையை பூட்டி 'சீல்' வைக்க உத்தரவிட்டார்.
பிரசாத கூடத்துக்கு 'சீல்'
அதிகாரிகளும் அதன்படியே செய்தனர். அப்போது கடை நடத்தியவர், 'ஐயா, நாங்கள் உங்கள் விதிகளின்படி தலையில் தொப்பி அணிந்துள்ளோம். கையில் கிளவுஸ் போட்டுள்ளோம். பிரசாத கவரில் காலாவதி தேதிக்கான முத்திரை வைத்துள்ளோம். பழைய கவர்கள் இருந்ததால், அந்த கவருக்கு ஸ்டிக்கர் ஒட்டி தேதி குறிப்பிட்டுள்ளோம். நீங்கள் கூறிய விதிகள் அனைத்தையும் கடைபிடிக்கிறோம்' என்றார்.
இதை தங்களது உயரதிகாரியிடம் மொபைல் போனில் தெரிவித்தனர், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள். அவரோ, 'ஏதாவது காரணம் கூறி, சீல் வையுங்கள்' என்றார். ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள தட்டை, பஞ்சாமிர்தம், முறுக்கு ஆகியவற்றை தலா ஒரு பை வீதமாக, மொத்தம் 3 பைகளில் மட்டுமே பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
(செய்தி சேனல்களில், சில பத்திரிகைகளில் வெளியானது போல், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வடபழனி கோவிலில் இருந்து பறிமுதல் செய்யப்படவில்லை)
இந்த சோதனையுடன் நிற்காமல், அடுத்ததாக சென்னை சாஸ்திரி நகரிலுள்ள, பிரசாதம் தயாரிக்கும் கூடத்திலும் சோதனை நடத்தி, 'இந்த கூடத்துக்கு சீல் வைக்கிறோம்' என்றனர்.
அங்கிருந்த கான்ட்ராக்டர், 'பிரசாதம் தரமற்றது என்பதற்கான லேப் ரிப்போர்ட் ஏதும் உள்ளதா, எதுவுமில்லாத நிலையில், 'சீல்' வைக்காதீர்கள்; நாங்கள் ஏற்கனவே இரு ஆண்டுகள் நஷ்டப்பட்டுள்ளோம்' என, கெஞ்சியுள்ளார்.
ஊடகங்களுக்குபொய் தகவல்
ஆனால், 'பிரசாத தயாரிப்புக்கு நீங்கள் 'அயோடைஸ்டு' உப்பு பயன்படுத்தவில்லை. சமையல்காரர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்கவில்லை. பாத்திரங்களை வெந்நீரில் கழுவவில்லை. தயாரிப்புக்கூடம் இன்னமும் சுத்தமாக இருந்திருக்க வேண்டும்' எனக்கூறி, பிரசாதங்கள், பாத்திரங்கள், அடுப்புகள், கட்டடம் என,அனைத்தும் சேர்த்து, மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு 'சீல்' வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், ஊடகங்களில் வெளியானது போல, பிரசாதத்தின் மதிப்பு மட்டும் 15 லட்சம் ரூபாய் என்பது முற்றிலும் தவறான செய்தியாகும். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் குறைவான பொருட்களையே பறிமுதல் செய்தனர்.
பொதுவாக, இதுபோன்ற சோதனைக்குச் செல்லும் அதிகாரிகள், ரெய்டு முடித்தபின் அதுகுறித்த விவரங்களை பத்திரிகை செய்திக்குறிப்பாகவோ அல்லது பேட்டியாகவோ வெளியிடுவது வழக்கம். ஆனால், ஆளுங்கட்சி 'டிவி'யின் உறவுக்காரரான அந்த உணவுப் பாதுகாப்புத்துறை உயரதிகாரி, பிரபல செய்தி சேனலுக்கு வீடியோ எடுத்து அனுப்பியது மட்டுமல்லாமல், வடபழனி கோவிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரசாதம் பறிமுதல் செய்யப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்புத்துறையினால் வழங்கப்பட்ட உரிமம் இருந்ததைமறைத்து, எல்லா ஊடகத்துக்கும் ஒரே மாதிரியான பொய்யான தகவலை தெரிவித்திருக்கிறார். இது அவரது உள்நோக்கம், காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
பிரசாத பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, 'தரமற்றவை' என, ரிப்போர்ட் வந்திருந்து நடவடிக்கை எடுத்திருந்தால் யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. அவ்வாறான அறிவியல் பூர்வ ஆய்வு முடிவுகளைப் பெறாமல் 'சீல்' வைத்ததன் வாயிலாக, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள், மனதில் வன்மத்துடன் செயல்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இந்த ரெய்டுக்கெல்லாம் மூல காரணம், வடபழனி முருகன் கோவிலில், 100 ரூபாய் தரிசன டிக்கெட் எடுக்காமல் வந்த உணவுப்பாதுகாப்புத்துறை உயரதிகாரியை கோவில் அலுவலர் அனுமதிக்காததுதான்.கோவில் பிரசாத கடையில், பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் 'ஊழியர்கள் தலையில் தொப்பியில்லை; கைகளில் கிளவுஸ் இல்லை.
மருத்துவச் சான்றிதழ் இல்லை; பாத்திரங்களை வெந்நீரில் கழுவுவதில்லை; மினரல் வாட்டரில்தான் உணவு சமைக்க வேண்டும்' எனக்கூறி சீல் வைத்த அதிகாரிகள், இதே காரணத்துக்காக இதுவரை சென்னையில் எத்தனை சிற்றுண்டி கடைகள், ஓட்டல்கள், பிரியாணி கடைகள், தெருவோர டிபன் கடைகளில் சோதனை நடத்தியிருக்கின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.மேற்கண்ட காரணங்களுக்காக 'சீல்' வைப்பதாக இருந்தால், தமிழகத்தில் எத்தனை ஸ்வீட் ஸ்டால்கள், ஓட்டல்கள், சாலையோர உணவு கடைகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தொழில் செய்ய முடியும் என்பதையும் உணவுப்பாதுகாப்புத்துறையின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.
- நமது நிருபர் -