புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: வெளியுறவு கொள்கையில், இந்தியாவிற்கு அமெரிக்கா பாடம் எடுக்கக் கூடாது. உக்ரைன் - ரஷ்யா போரில், நடுநிலை வகிப்பது இந்தியாவின் உரிமை. 'நேட்டோ'வை போன்றே, 'குவாட்'டும் ஒரு ராணுவ கூட்டமைப்பு தான். குவாட் அமைப்பில் இந்தியா இருப்பது நன்மை தராது; கேடு தான் நேரிடும். எனவே, குவாட்டில் இருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும்.
நாம எப்படி சிந்திக்கணும், செயல்படணும்னு, யாரும் பாடம் எடுக்கக் கூடாது. இதே அமெரிக்கா, ஈராக், ஆப்கன்ல போர்ல ஈடுபட்ட போதும், நாம நடுநிலை தானே வகித்தோம். அப்ப மட்டும், நம்ம நிலை அவங்களுக்கு உவப்பாக இருந்ததா...
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாஜலம் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது, 'போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழலை ஒழிப்பேன்' என்று உறுதி அளித்தார். ஆனால், ஆட்சி மாறியும் காட்சி மாறாதது போல, போக்குவரத்து துறையில், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த அதிகாரிகளே, தற்போதும் லஞ்ச வசூலில் கொடி கட்டி பறக்கின்றனர். இத்துறையில் லஞ்சத்தை கட்டுப்படுத்த தவறினால், மே 1ல், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்.
'வாங்கி' பழகி, மேலிடத்துக்கு முறையா கப்பம் கட்டிய அதிகாரிகளின் அனுபவத்தை பயன்படுத்திக்குவோம்னு நினைச்சிருப் பாங்க போலும்!
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: மூன்று மாதங்களாக, வட மாநில சட்டசபை தேர்தலால் ஏற்றப்படாத எரிபொருள் விலை, தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவித்த மத்திய அரசு, ஏன் விலையை உயர்த்த வேண்டும்?

அவங்க தான், உக்ரைன் போர்ல உக்கிரமா இருக்காங்களே... அவங்களிடம் போய் எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரிச்சு விற்கிறதுக்கு பதிலா, இங்க விலையை ஏத்துறது சிம்பிள்னு, நம்ம தலையில கட்டிட்டாங்க!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: விருதுநகரில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உறுதிப்படுத்த தேவையான, சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
எந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடந்தாலும் குற்றம் குற்றமே! இதில், ஒடுக்கப்பட்ட பெண் என தனியாக பேதம் பிரித்து பார்க்க வேண்டுமா, என்ன...