" பீர் குடிக்கும் மாணவிகள்" - இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் ? ராமதாஸ் வேதனை| Dinamalar

" பீர் குடிக்கும் மாணவிகள்" - இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் ? ராமதாஸ் வேதனை

Added : மார் 25, 2022 | கருத்துகள் (44) | |
சென்னை: பஸ்சில் மாணவிகள் பீர் குடித்து சென்ற சம்பவம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற கலாச்சார சீரழிவு தனது மனதை வாட்டுவதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை


சென்னை: பஸ்சில் மாணவிகள் பீர் குடித்து சென்ற சம்பவம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற கலாச்சார சீரழிவு தனது மனதை வாட்டுவதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.



latest tamil news



மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

''செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச் சீருடையில் அரசுப் பேருந்தில் நின்றுகொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

அந்தக் காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்குச் செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும்தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அக்காட்சியின் போது 'மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது' எச்சரிக்கை வாசகத்தைக் காட்டிவிட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்குத் துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அவர்களையும் கடந்த பொறுப்பு அரசுக்குத்தான் வர வேண்டும். 2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளைக் கடந்துதான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.


latest tamil news


முன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பதுதான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்குக் காரணம்.

மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளைத் தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X