மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு, பிறருக்கு வேலை வாங்கித் தருவதையே வேலையாக்கிக் கொண்ட சமூக சேவகருக்கு பாராட்டுகள் குவிகின்றன.புதுச்சேரியைச் சேர்ந்தவர், இ.பா.வீரராகவன்; தன்னால் முடிந்தளவு பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதை சமூக சேவையாக செய்து வந்தார். 2019 வரை 3,345 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார். இதையடுத்து, தனியார் 'டிவி'யில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நடிகர் விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டார்.தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி:'டிவி' நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியை தற்செயலாகவே சந்தித்தேன். மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, பகுதி நேரமாக சமூக சேவையை செய்து வந்தேன். வள்ளலாரை பின்பற்றும் நான், இது போன்ற சேவையால் மன நிறைவை பெற்றேன். இதனால் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரமும் இச்சேவையில் இறங்கினேன். இதற்காக முடிந்த உதவிகளை செய்வதாக விஜய் சேதுபதியும் கூறினார்.'டிவி' நிகழ்ச்சிக்கு பின், நாட்டின் பல பகுதியில் இருந்தும், வேலை கொடுப்போரும், வேலை தேடுவோரும் என்னை தொடர்பு கொண்டனர்.
புதுச்சேரி தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து, 'வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தொண்டு நிறுவனமாக செயல்பட, விஜய் சேதுபதி உதவினார்; எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் சம்பளம் கொடுத்தார். கடந்த 2020 முதல், ௨௦22 மார்ச் வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒரு லட்சத்து 133 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், புதுச்சேரியில் 7,000 பேரும், தமிழகத்தில் 93 ஆயிரம் பேரும் பயன் அடைந்துள்ளனர். எங்களது வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தை 4.35 லட்சம் பேரும், 1,400க்கும் மேற்பட்ட 'வாட்ஸ் ஆப்' குழுக்களும் பின்பற்றி வருகின்றனர். இதைத் தவிர, 73 சுயதொழில் முனைவோர்களையும் உருவாக்கியுள்ளோம்.
கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் துவங்கிய எங்கள் சேவை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்றிருப்பதில் மகிழ்ச்சி.வேலை தேடும் நபர்கள், https://www.vvvsi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தகவல்களை தினமும் பெறலாம். வேலை தரும் நிறுவனமாக இருப்பின், info@vvvsi.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -