கோவை: மூலப்பொருட்களின் விலை உயர்வு, போதுமான ஆர்டர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கோவையில் சிறு, குறு பவுண்டரிகள், தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உதவ வேண்டும் என, உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()
|
கோயமுத்துார் சிறு, குறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் (காஸ்மோபேன்) சார்பில், அவிநாசி சாலை அரசூரில் 100 ஏக்கரிலும், சத்தி சாலை மாணிக்கம்பாளையம் கிளஸ்டர் பார்க்கில், 50 ஏக்கரிலும் கோவையில் பவுண்டரிகள் அமைந்துள்ளது. இவற்றோடு, கோயமுத்துார் பவுண்டரி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (கோபியா) சார்பில், கிளஸ்டர் பார்க் கள்ளப்பாளையத்தில், 25 ஏக்கரில் அமைந்துள்ளன.
கோயமுத்துாரில் தயாராகும் மோனோபிளாக், செல்ப்ரைமிங், ஜெட், பவர்ஜெட், சப்மெர்சிபிள், கம்ப்ரசர் பம்புகளுக்கான காஸ்டிங் உதிரிபாகங்கள், இந்த பவுண்டரிகளில்தான் தயாரிக்கப்படுகின்றன.இதை தவிர, மோட்டார்களுக்கான காஸ்டிங் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
துபாய், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், காஸ்டிங் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வந்தது சோதனைஇந்நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வழக்கமாக கிடைக்கும் ஆர்டர்கள், இந்த ஆண்டு கோவையிலுள்ள பவுண்டரிகளுக்கு கிடைக்கவில்லை; வெறும் 20 சதவீத ஆர்டர்களே வந்துள்ளதாக புலம்பித்தீர்க்கின்றனர் தொழில் துறையினர்.
இந்த ஆர்டர்களில் பெரும்பாலானவை, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, பீஹார், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து வழக்கமாக கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ஆர்டர்களை வழங்கும், பெரு நிறுவனங்கள் அனைத்தும் வடமாநிலங்களிலுள்ள பவுண்டரிகளுக்கு, தங்கள் ஆர்டர்களை கொடுத்து விட்டன.
பின்னணி என்ன
ஆர்டர்கள் வரும் என்று காத்திருந்த, கோவை பவுண்டரி உரிமையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது குறித்து விசாரணையில் இறங்கியபோது, வட மாநிலங்களில் ஏராளமான பவுண்டரிகள் துவங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இது குறித்து, கோயமுத்துார் சிறு, குறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் (காஸ்மோபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது:
பவுண்டரிகளுக்கு தேவை யான மூலப்பொருட்கள், தேனிரும்பு (பிக்அயர்ன்) கரி (கோக்) பயன்படுத்திய பல வகை இரும்பு (ஸ்கிராப்) ஆகியவை மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து, கோவைக்கு சப்ளை செய்யப்பட்டன.மூலப்பொருள் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், அவற்றை கோவைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித்திருக்கிறது.
கூடவே, இங்கு தயாரிக்கப்படும் மோட்டார் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்ந்திருப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் குஜராத், கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், தங்களது உற்பத்தி கேந்திரங்களை துவக்கி விட்டன.அதனால் கோவைக்கு வரவேண்டிய ஆர்டர்கள் அனைத்தும், அந்நிறுவனங்களுக்கு போய்விட்டன.
ஆர்டர்கள் இல்லாததால் கோவையிலுள்ள, 400க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. விரைவில் மூடப்படும் நிலை உருவாகி வருகிறது. கடும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சங்க உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு, சிவசண்முக குமார் கூறினார்.
![]()
|
'ரா மெட்டீரியல் பேங்க்' அமைத்து தீர்வு காணலாம்
பவுண்டரிகளின் மூலப்பொருள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?
சில பவுண்டரி உரிமையாளர்கள் கூறியதாவது:n பவுண்டரிகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். இதற்காக மாநில அரசு, 'ரா மெட்டீரியல் பேங்க்' உருவாக்கி, அதில் சிறு குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை, குறைந்த விலைக்கு மொத்தமாக கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு நியாயமான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இதனால், மூலப்பொருட்களின் விலை குறைவதோடு, தட்டுப்பாட்டையும் குறைக்கலாம்.n சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். முன்பு, 5 சதவீதம் வாட், 12.5 சதவீதம் மத்திய விற்பனை வரி செலுத்தினோம். அதில் ரூ.1.5 கோடிக்குள் வர்த்தக விற்பனை இருந்தால், 5 சதவீதம் 'வாட்' செலுத்தினால் போதும்; மத்திய விற்பனை வரி செலுத்த வேண்டியதில்லை. அது போன்ற வரி விகிதத்தை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் எதிர்பார்க்கின்றன.
வடமாநிலங்களில் இரவு 10:00 மணியிலிருந்து அதிகாலை 5:00 மணி வரை, இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் அங்கு உற்பத்தி அதிகரிப்பதோடு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.உற்பத்தி பொருட்களின் விலையையும் குறைத்து விற்கின்றனர். அது போன்ற நடைமுறையை, தமிழகத்திலும் அறிமுகப்படுத்தினால் தொழில் வளர்ச்சியடையும். வேறு எந்த மாநிலத்திற்கும் இடம் பெயராது. தமிழகத்தில் தொழில் வளம் பெருகும்.
அதற்கானசெயல் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். சில விஷயங்களை நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
'தொழில் வளர்ச்சிக்கு என்றும் துணை'கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் கூறுகையில், ''கோவை பவுண்டரிகள், வடமாநிலங்களுக்கு இடம்பெயர்வது வேதனையளிக்கிறது. பாரம்பரிய பவுண்டரிகளின் உற்பத்தியை பெருக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். போதுமான ஆர்டர்களை பெற்று, இங்கேயே உற்பத்தியை தொடர, மத்திய தொழில்துறை அமைச்சர் ப்யூஸ்கோயலுடன் பேச ஏற்பாடு செய்யப்படும். கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எப்போதும் துணையிருப்போம். தொழிலாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.