அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நகர்ப்புற பகுதிகளில், நில தொகுப்பு முறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், நகர்ப்புற வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதனால், நகர்ப்புற பகுதிகளில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், புதிய புறவழி சாலைகள் அமைப்பது போன்ற திட்டங்கள் அவசியமாகின்றன.
![]()
|
அபரிமிதமாக வளர்ந்துவிட்ட சென்னை போன்ற நகரங்களில், அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டங்களுக்கான நிலம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதில் ஏற்படும் வழக்குகளால், வளர்ச்சி திட்டங்கள் தடைபடுகின்றன.இதனால், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் நகர்ப்புற நில தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது; இதற்கான வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில், நில தொகுப்பு முறையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய பகுதிகளில், நில தொகுப்பு முறையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
![]()
|
ஆனால், இந்த சாலையை ஒட்டிய பகுதிகளில், பெரும்பாலான நிலங்கள் அரசியல் பிரமுகர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. பல இடங்களில் நிலங்கள் அரசியல் கட்சியினர், அதிகாரிகளால் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன.புதிய திட்டங்களுக்கு, இந்த நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்காக, நில தொகுப்பு திட்டத்திலும் மேம்பாட்டு பணிகளை முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
சென்னை மட்டுமின்றி, பிற நகரங்களிலும் நில தொகுப்பு திட்டத்துக்கு, இத்தகைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. முதல்வர், தலைமை செயலர் ஆகியோர் தலையிட்டு, இது போன்ற சிறப்பு திட்டங்களை சிக்கல் இன்றி நிறைவேற்ற உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -