சென்னை : ''ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில், தமிழகத்தின் பங்கு குறைந்து விட்டது,'' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கவலை தெரிவித்தார்.
கடினமான பணி
சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள, அகில இந்திய ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: கல்வியின் வாயிலாக மனிதவள மேம்பாடு என்பது கொள்கை மட்டுமல்ல; அது ஒரு இலக்கு. அமைச்சரவையில் பங்கேற்கும்போது, நான் கேட்ட துறைகளை முதல்வர் கொடுக்கவில்லை; கேட்காத துறைகளை கொடுத்தார். அவருக்கு இருக்கும் தெளிவு எனக்கு இல்லை.
நிதி துறையுடன் மனிதவள மேம்பாட்டு துறை எனக்கு வழங்கப்பட்டது. நிதியை பல வகைகளில் திரட்டலாம். வங்கியாளராக இருந்ததால், இதை கூறுகிறேன். உலகத்தின் சொத்து அதிகரித்து வருகிறது. ஆனால், மனித வளத்தை குறுகிய நேரத்தில் மேம்படுத்துவது கடினமான பணி. ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளில், தமிழகம் சிறப்பாக இருந்தது; பல்வேறு காரணங்களால், அது குறைந்து விட்டது.
சில ஆண்டுகளாக மூன்று பேர், ஐந்து பேர், எட்டு பேர்தான் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுகின்றனர். தமிழகத்தில், 38 மாவட்டங்கள், 55 துறைகள், 21 மாநகராட்சிகள், பல உள்ளாட்சி அமைப்புகள், 600 வாரியங்கள் உள்ளன.

மகிழ்ச்சி
ஆனால், 300 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் உள்ளனர். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இங்கு பயிற்சி பெற உள்ள 325 பேரும் மகத்தான பணியில் அமர்வதற்கு, இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். என் மூத்த மகன், ஒரு போட்டி தேர்வில், 95 சதவீதம் மதிப்பெண் வாங்கினான்; அதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், என்னை போன்ற படித்த குடும்பத்தில் பிறந்தவர்கள், அதிக மதிப்பெண் பெறுவதில் ஆச்சரியம் இல்லை.
வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தந்து, வெற்றி பெற செய்வது தான் சமூக நீதி. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுக்கான, புவியியல்- 1 பாடப் புத்தகத்தை, அமைச்சர் தியாகராஜன் வெளியிட, தலைமை செயலர் இறையன்பு பெற்றுக் கொண்டார். மனிதவள மேலாண்மை துறை செயலர் மைதிலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE