வளர்த்த கிடா மார்புல பாயுது...

Added : மார் 29, 2022 | |
Advertisement
கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா முடிந்த நிலையில், சித்ராவும், மித்ராவும் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.''அடேயப்பா... குண்டத்துல செம கூட்டமாம்...,'' மித்ரா சொன்னதற்கு, ''ரெண்டு வருஷமா கொரோனாவால, விழா நடக்கலே. அதனாலதான் கூட்டம்'' என்றாள் சித்ரா.அம்மனை தரிசனம் செய்து, ஐஸ் விற்றுக் கொண்டிருந்தவரிடம், ''ரெண்டு ஐஸ் குடுங்க,'' என்றதும், அவர், ''30
 வளர்த்த கிடா மார்புல பாயுது...

கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா முடிந்த நிலையில், சித்ராவும், மித்ராவும் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.''அடேயப்பா... குண்டத்துல செம கூட்டமாம்...,'' மித்ரா சொன்னதற்கு, ''ரெண்டு வருஷமா கொரோனாவால, விழா நடக்கலே. அதனாலதான் கூட்டம்'' என்றாள் சித்ரா.அம்மனை தரிசனம் செய்து, ஐஸ் விற்றுக் கொண்டிருந்தவரிடம், ''ரெண்டு ஐஸ் குடுங்க,'' என்றதும், அவர், ''30 ரூபாய்ங்க...'' என்றார்.

'என்னங்க அய்யா, 10 ரூபா ஐஸ்சை, 30 ரூவான்னு விக்கிறீங்க'' என சித்ரா கேட்க, ''என்னம்மா பண்றது; கோவில் நிர்வாகத்துக்கு, ஒரு நாளைக்கு, 2 ஆயிரம் ரூபா குடுக்கணும். இதுல போலீசுக்கு, தனியா, 500 ரூபாய்ன்னு வாங்கிட்டு போயிடறாங்க. விலையை கூட்டினாதான், கட்டுப்படியாகும். என்னம்மா பண்றது,'' என, நிலைமையை விளக்கினார்.
வாடகையில்'உள் குத்து'பணத்தை கொடுத்து ஐஸ் வாங்கி, இருவரும் சாப்பிட்டவாறே, ஸ்கூட்டரை கிளப்பினாள் சித்ரா. வீட்டுக்கு சென்று இருவரும் சோபாவில் அமர, எலுமிச்சை ஜூஸ் தயாரித்து எடுத்து வந்தாள் மித்ரா.''எங்க பார்த்தாலும் உள் வாடகை விவகாரம் தான், பெரிய பிரச்னையா இருக்கு. லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் காதுக்கே போயிடுச்சுன்னா பார்த்துக்கோ...'' என்றாள் சித்ரா.
''கார்ப்ரேஷன் கட்டுப்பாட்ல இருக்கற வணிக வளாகத்துல, குறிப்பிட்ட சிலரு, நிறைய கடைகளை ஏலம் எடுத்து, அதை உள்வாடகைக்கு விட்டு, செமத்தியா துட்டு பாக்குறாங்க. வாடகை பாக்கி வச்சிருக்கிற கடைகளை பூட்டி 'சீல்' வைக்க, அதிகாரிங்க போறப்பதான், உள் வாடகைக்கு குடுத்த விஷயம் மத்த கடை நடத்தற கடைக்காரங்களுக்கே தெரிஞ்சுதாம்...''''இதுல என்ன ஒரு விசேஷம்ன்னா, 'சிண்டிகேட்' போட்டு கடைகளை ஏலம் எடுக்கறவங்களுக்கு, சில ஆபீசர்களே உதவி செய்றாங்களாம்.

இதுக்காக, ஆபீசர்களை நல்லா 'கவனிச்சு'டறாங்க. அந்த மாதிரி வசூல் அள்ற ஆபீசர்ங்க யாரு, யாருன்னு, லஞ்ச ஒழிப்பு போலீஸ்காரங்க 'லிஸ்ட்' எடுத்துட்டு என்கொயரி போகுதாம்..''''கண்டுபிடிச்சு, களை எடுத்தாதான் சரி வரும்...'' ஆமோதித்தாள் மித்ரா, ''ஆட்டுவித்தவரையே ஆட்டி வைக்க பார்க்கிறாங்களாம், ஆளுங்கட்சி கவுன்சிலர்ங்க'' என புதிர் போட்டாள்.குறுக்கே திரும்பிய உ.பி.,ஸ்''கொஞ்சம் வெவரமா சொல்லுடி''''அக்கா, கார்ப்ரேஷன் எலக்ஷன்ல வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடுன்னு, 'ஒன் மேன்ஆர்மி'யாட்டம் செயல்பட்டு, பலரையும் பந்தாடி, 'செல்வா'க்கை காண்பிச்ச சவுத் வி.ஐ.பி.,க்கு, அவங்க கட்சி கவுன்சிலர்களே 'செக்' வைக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''''மாமன்றத்துல நடந்த முதல் கூட்டத்துல கால்நடை சந்தை, தினசரி சந்தை ஏலம், மீன் மார்க் கெட் குத்தகைன்னு தீர்மானம் வந்தப்போ, எதிர்க்கட்சிகாரங்க ஆட்சேபனை தெரிவிச்சாங்க.
அவங்களுக்கு ஆதரவா, ஆளுங்கட்சியை சேர்ந்த சில கவுன்சிலர்களும் குரல் கொடுக்க, தீர்மானமே நின்னு போச்சாம்,''''என்ன விஷயம்னு விசாரிச்சப்ப தான், அந்த குத்தகை இனங்கள் எல்லாம் 'செல்வா'க்கானவரோட பினாமி பேர்ல இருக்கறது தெரிஞ்சுது. இதேபோல, வி.ஐ.பி.,யோட ஆதரவாளரு ஆடு வதைக்கூடத்துக்கு டெண்டர் எடுக்க, அவருக்கு நெருக்கடி தர்ற மாதிரி, 'மண்டல வாரியா ஆடு வதைக்கூடம் கட்டோணும்'ன்னு, ஆளுங்கட்சிக்காரங்களே கோரிக்கை வச்சாங்க.

இத கேள்விப்பட்ட வி.ஐ.பி., தான் வளர்த்த கட்சிக்காரங்களே, இப்படி குறுக்க திரும்பிட்டாங்க'ன்னு, புலம்புகிறாராம்,'' என உட்கட்சி உரசலை சொல்லி முடித்தாள் மித்ரா.''மித்து, இதே மாதிரி, நானும் ஒரு உள்குத்து சொல்றேன் கேளு. 54வது வார்டுல, அடிப்படை வசதி செஞ்சு கொடுக்கணும்ன்னு, தி.மு.க., காரங்க மறியல் பண்ணாங்க. அந்த வார்டு கவுன்சிலர், தோழர் கட்சியை சேர்ந்தவராம். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூரிய கட்சி பெண் பிரதிநிதிக்கும் தகராறு. இத காரணமா வச்சு, மக்களை துாண்டிவிட்டு மறியல் பண்ணதா வார்டில் பேச்சு உலா வருது,'' என, கூட்டணி களேபரம் சொன்னாள் சித்ரா.திருந்தினால் பரவாயில்லை''தெற்கு தாலுகாவை கவனிச்சுட்டு இருந்த அதிகாரி தான், நிலம் எடுப்பு பிரிவு தாசில்தாரா வந்திருக்காரமே,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமான்டி மித்து.
அவரு அந்த ஆபீசில வேல பார்த்தப்போ, நிறைய புகார் கிளம்பியிருக்கு. யாரு போன் பண்ணாலும் எடுக்கறது இல்லை. வாரிசு சான்றிதழ் கேட்டு வர்ற விண்ணப்பங்களை 'ரிஜக்ட்' பண்ணிட்டு, மனுதாரரை, நேர்ல வர சொல்லி, 'கவனிக்க' சொல்றாராம்,''''அதுமட்டுமில்லாம, பட்டால பேர் மாத்தறது, சர்வே செய்யறதுனு எல்லாத்துலேயும் வசூல் அள்றார், 'ராஜகுமாரன்' மாதிரி தனி ராஜங்கம் நடத்துறார்ன்னு, மாவட்ட ஆபீசருக்கு தொடர்ந்து புகார் போய்ட்டே இருந்ததால, வேற வழியில்லாம, டிபார்ட்மென்ட் மாத்திட்டாங்க...'' என்றாள் சித்ரா.''என்ன பண்ணாலும் சிலரு திருந்தற மாதிரி தெரிலைங்க்கா...'' புலம்பிய மித்ரா, ''கொஞ்சம் நாள் முன்னாடி, தாராபுரத்துல பட்டா மாறுதல் தொடர்பா லஞ்சம் வாங்கின ஆர்.ஐ., ஒருத்தரு, சிக்கினாரு. 'டாய்லெட்' போறேன்னு சொல்லிட்ட, பின்வாசல் வழியா தப்பியோட டிரை பண்ணிருக்காரு.
ஆனா, போலீஸ்காரங்க மடக்கி பிடிச்சுட்டாங்களாம்,'' என்று விளக்கினாள்.பயிர்களை மேயும் வேலி''மக்கள்கிட்ட கையேந்தறது, அப்புறம் தப்பிக்க பார்க்கறதுன்னு, இதெல்லம் நல்லாவா இருக்குது,'' என்ற சித்ரா, ''பல்லடம், கரைப்புதுார்ல நிலம் மோசடி தொடர்பா வந்த புகார்ல, மோசடி நபரை தப்பிக்க வைக்க, பதிவு துறைல இருக்கற ஆபீசர்ங்க சிலரு, பலே ஐடியா கொடுத்த மேட்டர் வெளிய வந்துருக்கு. இந்த மேட்டர், பெரிய அதிகாரி காதுக்கும் போயிடுச்சாம்...'' என்றாள் சித்ரா.''அவரு, ஏதாவது நடவடிக்கை எடுப்பாருன்னு நம்பலாம்...'' என்றாள் மித்ரா.''மித்து, லிங்கேஸ்வரர் ஊரில், எம்.வி.ஐ., ஆபீசில எந்த வேலைக்கு போனாலும், கவர்மென்ட் நிர்ணயிச்ச கட்டணத்த விட, கூடுதலா, பணம் வசூல் பண்றாங்களாம். 'எதுக்குன்னு கேட்டா, 'டாக்குமென்ட் வெளியே குடுத்து டைப் பண்றதுக்கு தான்,'னு சொல்லி சமாளிக்கிறாங்களாம்...'' என்றாள் சித்ரா.
''அக்கா, அங்க மட்டுமில்ல. எல்லா பக்கமும் அப்டித்தான், கறார் வசூல் பண்ணறாங்க,'' சொன்ன மித்ரா, ''பல்லடம் - அல்லாளபுரம் பக்கத்துல, பாலம் கட்டுற வேலை நடந்துச்சு. அதில, தோண்டி எடுத்த மண் எல்லாத்தையும், ஹைவேஸ் ஆபீசர் ஒருத்தரு, வித்து, தன்னோட பேங்க் பேலன்ஸ் ஏத்திட்டாராம்.மண்ணையும் பொன்னாக்குறதுல, அவரை மிஞ்ச யாருமில்லேன்னு, 'சரவணன்' அங்கிள் தான் சொன்னாரு,'' என இன்னொரு தகவலையும் கூறினாள். ''மண்ணை பத்தி பேசவும் தான், இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து. நொய்யல் கரையை ஆக்கிரமிச்சு, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒருத்தரு, கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டு, சம்பாதிச்சுட்டு இருக்காருன்னு, ரொம்ப நாளா பேசிட்டு இருக்கோமில்ல,''''போன ஆட்சியில, அவரு மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல. இப்போ ஆட்சி மாறியிருக்கு. ஆபீசர்ங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்,'' என மித்ரா சொல்லி முடிக்க, அவளின் மொபைல் போன் சிணுங்கியது. எதிர்முனையில் பேசியவர்,''ஹலோ... இப்ராகிமா?'' என கேட்க, ''இல்லை…ராங் நம்பர்'' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.

'ஷாக்' அடிக்கும் நிபந்தனை''மின் வாரிய ரூல்ஸ்படி கட்டடம் கட்டி முடிச்சு, கம்ப்ளீஷன் சர்டிபிகேட் இருந்தாதான் மின் இணைப்பு கொடுக்க முடியும்ன்னு, இபி., காரங்க சொல்றாங்களாம். இது ஆவின் பூத்களுக்கும் பொருந்துமாம்,'' என்றாள் சித்ரா.''தகர பூத்துக்கு எப்படிங்க்கா...'' இடைமறித்தாள் சித்ரா.''அட நீ வேற. இத பத்தி பூத் உரிமையாளர் ஒருத்தர் கேட்டதற்கு, 'அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, சர்டிபிகேட் கொடுத்தாதான், கனெக்ஷன் தருவோம்'னு, ஆபீசர் சொல்றாராம்...'' ''ஒரு வேளை, 'கவனிச்சா' தான் கொடுப்பாங்களோ என்னவோ...'' சந்தேகம் கிளப்பிய மித்ரா, அரசியல் மேட்டருக்கு தாவினாள்.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சூலுாருக்கு பிரேமலதா வந்தாங்கள்ல. அங்க நடந்த இன்டோர் மீட்டிங்கில், முக்கிய நிர்வாகிகளையெல்லாம் வரச்சொல்லி பேசினாங்க.

'நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு; நம்மகிட்ட இருந்த போனவங்க மரியாதை இல்லாம இருக்காங்கன்னு,' தைரியம்' சொன்னாங்களாம்,''''இதையெல்லாம், கேட்ட கட்சிக்காரங்க, 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்றதா'னு பேசிக்கிட்டாங்களாம். இதுல என்ன விசேஷம்ன்னா, மாநகர முக்கிய நிர்வாகி ஒருத்தரும், அவரோட ஆதரவாளர்களும், மீட்டிங்குக்கே போகலையாம்,'' ''அவரோட ஏற்பாட்டில் தான், முரசு கட்சிக்காரங்களை, சூரிய கட்சியில ஐக்கியமாக்க திட்டம் தீட்டியிருக்காங்க. இந்த இணைப்பு விழாவை நடத்த 'தீயா வேல செய்யணும் குமாரு'ன்னு, ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகி தீவிரம் காட்டறாராம்...'' என, நிலவரம் சொன்னாள் மித்ரா.'மூடி' மறைத்த போலீசார்அப்போது டிவியில், பொது வேலை நிறுத்தம் பற்றிய செய்தி ஒளிபரப்பானது. அதனை பார்த்த சித்ரா, ''மித்து, திருப்பூரில் பந்த்பிசு பிசுத்து போச்சாமே...'' என்றாள்.''ஆமாங்க்கா, இதுக்காக, ரெண்டு மாசமாக மீட்டிங் போட்டு, தோழர்கள் நோட்டீஸ் எல்லாம் குடுத்தாங்க.

ஆனா, சக்ஸஸ் ஆகலே. பஸ் போக்குவரத்து மட்டுந்தான் பாதிச்சுது,'' விளக்கிய மித்ரா, ''அக்கா, நார்த் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த தண்ணீர் தொட்டியில ஒரு சின்ன பையன் விழுந்துட்டானாமே'' என, போலீஸ் மேட்டர் பேசினாள்.''ஆமான்டி மித்து. கம்ப்ளைன்ட் தர்ற விஷயமா, தன் குழந்தையோட ஒரு லேடி, ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க. அங்க இருந்த நிலத்தடி நீர் தொட்டி மூடி மேல நின்னு பையன் விளையாடிட்டு இருந்தப்போ, திடீர்ன்னு உடைஞ்சு, தொட்டிக்குள்ள விழுந்துட்டான்,''''உடனே, அங்கிருந்த ரெண்டு போலீஸ்காரங்க ஓடிப்போய் பையனை துாக்கிட்டாங்க. இதனால, அவன் தப்பிச்சான். இந்த விவகாரம் வெளியே தெரியாம, பார்த்துக்கிட்டாங்களாம். அன்னைக்கு ராத்திரியே தொட்டியோட மேல் மூடியை ஸ்ட்ராங் பண்ணிட்டாங்களாம்,'' தெளிவுபடுத்தினாள் சித்ரா.

''அக்கா, போக்குவரத்து நெரிசல் குறித்து புகார் கொடுத்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருத்தரை, டிராபிக் போலீஸ் மிரட்டறாங்களாம்...'' என்றாள் மித்ரா.''அட, இது எங்க?''''லிங்கேஸ்வரர் ஊரில், காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கு. பள்ளி மாணவ, மாணவியர் சிரமப்படறாங்கன்னு, குறிப்பிட்ட சில இடத்தில், டிராபிக் போலீசுக்கு டியூட்டி போடுங்கன்னு, ரிட்டயர்டு எஸ்.ஐ., ஒருத்தரு, ஸ்டேஷனில் சொன்னாராம்,''''இத கேட்டு, டென்ஷன் ஆன, சிலர், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., யை போனில் மிரட்டியிருக்காங்க. அவரும், அதிகாரிகிட்ட புகார் கொடுத்தும், ஒரு நடவடிக்கையும் இல்லாததால், ரிட்டயர்டு ஆன, மதிப்பே போயிடுது,' என புலம்பிட்டு இருக்கார்'' என மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து. டைம் ஆயிடுச்சு. கெளம்பறேன் என, ஹெல்மெட் அணிந்தாவறே புறப்பட்டாள் சித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X