சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தன்னை ஜாதி பெயரை சொல்லி மிரட்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) ராஜேந்திரன் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பி.டி.ஓ., ராஜேந்திரன் கூறியதாவது: மார்ச் 27 காலை என்னையும் மற்றொரு பி.டி.ஓ., அன்பு கண்ணனையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு வரச் சொன்னதாக உதவியாளர் சத்தியேந்திரன் கூறினார்.அமைச்சரை சந்திக்க சிவகங்கை வீட்டிற்கு சென்றபோது அவர் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, ஒன்றிய தலைவர் சொல்றதை மட்டும் தான் கேட்பாயா, எங்க கட்சிக்காரர் சொல்வதை கேட்க மாட்டாயா.உன்னை பி.டி.ஓ., சீட்டில் வைக்க மாட்டேன். உடனடியாக உயர் அதிகாரி அமுதாவிடம் சொல்லி பணிமாறுதல் செய்வேன். பி.டி.ஓ., பதவி வகிப்பதற்கு உனக்கு தகுதி இல்லை என கோபமாக பேசினார்.வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் என்னால் துாங்க முடியவில்லை. இதுதொடர்பாக கலெக்டர், கூடுதல் கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க சென்றேன். சந்திக்க முடியவில்லை. திரும்ப வந்து ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்கிறேன். இது நான் சந்திக்காத மனக்காயங்களை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.
இதையடுத்து தான் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் போக்குவரத்து துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிற்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.