கோவை: ''தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள்,'' என, பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
![]()
|
கோவையில் எம்.எல்.ஏ., வானதி நிருபர்களிடம் கூறியதாவது:
சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த, தமிழக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மாநில அரசின் வேளாண் பட்ஜெட், 95 சதவீதம் மத்திய அரசின் திட்டங்கள், விதிகளை செயல்படுத்துவதாக உள்ளது. தி.மு.க., அரசின் பட்ஜெட்டில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி வருவாயை பகிர்ந்து அளிக்கிறது. இதன் மூலம், தமிழகத்துக்கு, 24 சதவீதம் அதிக வரி வருவாயை வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் நிதி வருவாயை அதிகரிக்க திட்டம் தீட்டாமல், மத்திய அரசை விமர்சனம் செய்கின்றனர்.
![]()
|
மாநில முதல்வர் வெளிநாடு செல்லும் போது விமர்சித்தால் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி அதே காரணத்துக்காகத் தான் வெளிநாடு சென்றார். அப்போது விமர்சித்தது யார்? பா.ஜ.,வின் சித்தாந்தத்துக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தி.மு.க.,வினர் மீது விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை? கேள்வி கேட்பவர்களை தி.மு.க., அரசு ஒடுக்க நினைக்கிறதா? மத்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை அழித்த தொழிற்சங்கங்கள் தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.