தஞ்சாவூர்: தன்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தம் தெரிவித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 'திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள், தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்' என அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை, சென்னை வானவில் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின. இதை தொடக்கி வைத்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். பெண்கள் உயர்விற்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
சமூக இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகுந்த பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனவே இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள். என்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைத்தளத்தில் 'இரு மாநிலங்களுக்கு இவள் கவர்னரா' என்று ஒருமையில் பயன்படுத்தி தெரிவித்திருந்தார். திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள். தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். தமிழை வணங்குவோம்; விமர்சனம் என்பது தமிழரின் பங்கு, ஆனால் அதை மரியாதை சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.