விழுப்புரம்: சென்னை நோக்கி சென்ற திருச்சி ஆதி திராவிட நலத்துறை அதிகாரி காரில் கட்டு கட்டாக பணம் ரூ.40 லட்சம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இருப்பவர் சரவணக்குமார். இவர் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் காரில் கட்டு கட்டாக பணம் எடுத்து செல்வதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் அதிகாரிகள், பிற்பகல் 2: 30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே சரவணக்குமார் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, பைகளில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரையும், கார் டிரைவராக இருந்த குளித்தலையை சேர்ந்த மணியையும் விழுப்புரம் பழங்குடியின அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். எங்கெங்கிருந்து பணம் வசூலிக்கப்பட்டது, பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
