மைசூரு:''முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவார் என்பது வெறும் வதந்தி. அவரது தலைமையிலேயே, அடுத்த சட்டசபை தேர்தல் நடக்கும்,'' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
மைசூரில் அவர் கூறியதாவது:நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு நிறைவேற்றியுள்ளது. மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவான அலை உள்ளது. நாங்கள் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.ஏப்ரல் 1க்கு பின், மூன்று, நான்கு கட்டங்களாக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சில எதிர்க்கட்சிகள் கூறுவது போல, பதவி காலம் முடியும் முன்பே சட்டசபை தேர்தல் நடக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகாவுக்கு வந்து சென்ற பின், இது போன்ற செய்தி இருந்தால் தெரிவிப்போம்.விஜயேந்திரா அமைச்சரவையில் சேர்வது குறித்து, நான் யாருடனும் ஆலோசிக்கவில்லை. முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவார் என்பது, வெறும் வதந்தி. அவரது தலைமையிலேயே, அடுத்த சட்டசபை தேர்தல் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.