பெங்களூரு:'ஹலால்' எனப்படும் முஸ்லிம் மத வழக்கப்படி பலி கொடுக்கப்படும் விலங்குகளின் இறைச்சிக்கு, மாநிலத்தில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
இதையடுத்து, முதல்வர் பசவராஜ் பொம்மை, ''இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த பின், மாநில அரசு, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்,'' என கூறினார்.
கர்நாடகாவின் கடலோர பகுதிகளிலுள்ள ஹிந்து மத கண்காட்சிகள், கோவில் வளாகங்களில் பிற மதத்தினர் கடைகளுக்கு தடை விதிக்க கோரி, ஹிந்து அமைப்பினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.'ஹிஜாப்' எனப்படும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஹிந்து மத அமைப்புகள் சில இந்த அழைப்பை விடுத்துள்ளன.
இந்நிலையில், முஸ்லிம்கள் நடத்தும் இறைச்சி கடைகளில், ஹலால் முறைப்படி விலங்குகள் கொல்லப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவதற்கு, சில ஹிந்து அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:இவ்விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சில தரப்பில் எழுந்துள்ள எதிர்ப்புகளை, மாநில அரசு ஆய்வு செய்யும்.ஹலால் இறைச்சியை கட்டுப்படுத்த அரசு சட்டம் தேவையா என தெரியவில்லை. அப்படியான விதிகள் எதுவும் இல்லை.
இது நடைமுறையில் இருந்த ஒன்று. இப்போது, கடுமையான ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. சில அமைப்புகள் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்து வருகின்றன. அரசின் முடிவு என்ன என்பது குறித்து ஆய்வுக்கு பின் தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது இன்னொரு நிருபர், 'வலதுசாரி என்பதை குறிக்கும் வகையில், 'ரைட் விங்' அமைப்புகளின் கைவரிசை தான் இதன் பின்னணியில் உள்ளதா...' என, முதல்வரிடம் கேட்டார். அதற்கு முதல்வர், ''எங்கள் அரசை பொறுத்தவரை, அரசு இறக்கை கட்டி பறக்கிறதே தவிர, ரைட் விங், லெப்ட் விங் என்பதில்லை,'' என்றார்.'விங்' என்றால் இறக்கை என்பதை நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிட்டார்.இந்நிலையில், உடுப்பியில் 'ஹலால்' இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என ஹிந்து ஓட்டல்களுக்கு மாவட்ட பா.ஜ., தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள போஸ்டர், சமூக வலைதளங்களில் 'வைரலாகி' வருகிறது.