பெங்களூரு:''கால்நடைத்துறைக்கு மருந்து வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்படும்,'' என கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவ்ஹான் தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவை கேள்வி நேரத்தில், நடந்த விவாதம்:
காங்., - கோவிந்த ராஜு: மருந்துகள் கலப்படத்தால் மாடுகள் இறக்கின்றன. விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். கால்நடைத்துறையில், மருந்துகள் வாங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதை சபை கமிட்டி, சிறப்பு விசாரணை குழு அல்லது ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
அமைச்சர் பிரபு சவ்ஹான்: மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், இ - டெண்டர் மூலம் மருந்துகள் வாங்கப்படுகிறது. தொழில்நுட்ப கமிட்டி சிபாரிசுபடி, தேவையான மருந்துகள் வாங்கப்படுகிறது. தகுதியானவர்களுக்கு, டெண்டர் அளிக்கிறோம். மருந்துகள் வாங்கியதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. எங்கள் அரசு, மருந்துகள் வாங்குவதில், வெளிப்படையாக உள்ளது.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தினர்.
சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: விசாரணை நடத்துங்கள்.
அமைச்சர் பிரபு சவ்ஹான்: கால்நடைத்துறையில் மருந்து வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
காங்., - பிரகாஷ் ராத்தோட்: கால்நடைத் துறையில், டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
அமைச்சர்: ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட டாக்டர்களை நியமிக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட பின், காலியான இடங்களுக்கு டாக்டர்கள் அனுப்பப்படுவர்.
காங்., - கோவிந்த ராஜு: கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிக்கின்றனர். அமைச்சர் சிரித்தபடி காலம் கழிக்கிறார். கால்நடைத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதை சபை கமிட்டி விசாரணைக்கு உட்படுத்துங்கள்.
அமைச்சர் பிரபு சவ்ஹான்: நான் தீவிரமாகத் தான் இருக்கிறேன்; சிரிக்கவில்லை. உறுப்பினர்களின் கோரிக்கைப்படி, துறை அளவில் விசாரணை நடத்துவேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.