ராய்பூர்: ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956ன் படி, திருமணமே செய்துகொள்ளாத பெண்ணும் தனது பெற்றோரிடம் திருமண செலவினை கோரலாம். அது பராமரிப்பு வரம்பிற்குள் வரும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (35). இவர் துர்க் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். “தனது தந்தை பானு ராம் பிலாய் ஸ்டீல் ஆலையின் ஊழியர். அவர் ஓய்வு பெற உள்ளார். ஓய்வூதிய தொகையாக ரூ.55 லட்சம் பெற வாய்ப்புள்ளது. அதில் ஒரு பகுதியாக ரூ.20 லட்சத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். சட்டத்தில் அவ்வாறு உத்தரவிட இடமில்லை என கூறி அவரது மனுவை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சட்டப்படி, திருமணமாகாத மகள் தனது தந்தையிடம் திருமணச் செலவுகளைக் கோரலாம், அந்தச் செலவு பராமரிப்பு வரம்பிற்கு உட்பட்டது என்று ராஜேஸ்வரி தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.திவாரி வாதாடினார். இதனை தொடர்ந்து உயர் நீதிமன்ற அமர்வு குடும்ப நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956ன் பிரிவு 3 (பி) (ii)ன் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் படி கூறி குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றியது. தீர்ப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இதழ்களில் வெளியிடவும் அங்கீகரித்தனர். இதன் மூலம் வழக்கு அனைத்து சட்டப் புத்தகங்களிலும் இடம்பெறும்.