சேலம் : சேலத்தை மையமாக கொண்டு நக்சல்கள், ஆள் சேர்ப்பு மற்றும் ஆயுத பயிற்சிக்கு சதித் திட்டம் தீட்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 'க்யூ' பிரிவு உள்ளிட்ட உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவரது மனைவி கலா, 50; தங்கை சந்திரா, 47, ஆகியோர் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் 2002ல், தமிழகத்தில் நக்சல் இயக்கத்தை துவக்கினர்.இதில் சேர்ந்தவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததுடன், இளைஞர்களை மூளை சலவை செய்து, தங்கள் இயக்கத்தில் இணைக்கும் பணியையும் மேற்கொண்டனர்.
மூவரும் தலைமறைவான நிலையில், தமிழக க்யூ பிரிவு போலீசார் 2016ல் கரூரில் கலா, சந்திராவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். மணிவாசகத்தை, கேரள போலீசார் 2020ல், 'என்கவுன்டர்' செய்தனர். அவரது உடல், சொந்த மாவட்டமான சேலம், தீவட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, சுடுகாட்டில் கூடிய நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம்' என, கோஷம் எழுப்பினர். அதன் அடிப்படையில், 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், ஜாமினில் வந்த கலா, தற்போது தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், மதுரையைச் சேர்ந்த விவேக், தர்மபுரியைச் சேர்ந்த 'பொடா' பாலன், சீனிவாசன், சித்தானந்தம், சேலம், செட்டியம்பட்டியைச் சேர்ந்த இளங்கோ ஆகியோர், தங்களது சொந்த ஊர்களின் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இவர்கள், நக்சல் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் வகையில், இளைஞர்களை மூளைச் சலவை செய்வதாகவும், மீண்டும் ஆயுத பயிற்சியை துவக்க திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.இதையடுத்து, தமிழகம் முழுதும் க்யூ பிரிவு உட்பட உளவு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மதுரை, தர்மபுரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் உளவுப்பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபிநபு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,க்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி, கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
க்யூ பிரிவு டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது: நக்சல்கள் மீது போடப்பட்ட பொடா, உபா எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டப்பிரிவு வழக்கில், கரூரில் போடப்பட்ட வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதே நேரத்தில், மணிவாசகம் என்கவுன்டருக்கு பழிக்குப் பழியாக தாக்குதல் நடத்த, அவர்கள் சதிதிட்டம் தீட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தென்மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நக்சல்கள், அப்பாவி இளைஞர்களை, தங்களின் இயக்கத்தில் சேர்க்கக்கூடும். பெற்றோர், இளைஞர்கள் அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிவிடக் கூடாது என்பதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜாதி மோதல் தடுக்க சிறப்பு திட்டம்
டி.ஜி.பி., சைலேந்திரபாபு அளித்த பேட்டி: தமிழகத்துக்குள் கஞ்சா, குட்கா விற்பனைக்கு வருவதை தடுக்க கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.தற்போது, போலீசாருக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், மொத்தமாக கடத்தி வரப்படுவதை தடுத்து, பறிமுதல், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு மட்டுமே செய்யப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
சமீபத்தில் கூட, வடமாநிலங்களுக்கு சென்று மூன்று பேரை கைது செய்துள்ளனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள், கலவரங்களை தடுக்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, மோதல்களுக்கு முடிவு கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.